விளையாட்டு

‘இங்கிலாந்துக்கு பல லட்சம் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்தியிருப்பார் ஜோப்ரா ஆர்ச்சர்’ 

செய்திப்பிரிவு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் மற்றும் 2ம் டெஸ்ட்டுக்கு இடையே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கரோனா பயோ-செக்யூர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பிரைட்டனில் உள்ள தன் வீட்டுக்குச் சென்று வந்ததால் அவர் இடம் பறிபோனது. இதோடு மட்டுமல்லாமல் அவர் 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும், 2 பரிசோதனைகளுக்குப் பிறகு நெகெட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர் 3வது டெஸ்ட் போட்டிக்கு பரிசீலிக்கப்படுவார்.

இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரின் செயல் தொடரையே பெரிய சிக்கலுக்குள்ளாக்கியிருக்கும் இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பல லட்சம் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லி ஜைல்ஸ் தெரிவித்துள்ளார்.

“இது பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கும், இந்த ஒட்டுமொத்த கோடை கால கிரிக்கெட்டே சிக்கலுக்குள்ளாகி இங்கிலாந்து பல லட்சம் பவுண்டுகளை இழந்திருக்கும்.

இதன் விளைவுகளை ஆர்ச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இளம் வயது தவறுகள் செய்வது இயல்பு. அவர் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், ஒழுங்கு நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் எதிர்க்கட்சியினரின் சம்மதத்துடன் பயோசெக்யூர் சூழலில் இந்தத் தொடருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், “ஆர்ச்சர் வீட்டுக்குச் சென்றார், இது நடைமுறைகளை மீறிய செயலாகும், கரோனா பயோ செக்யூர் பாதுகாவலிலிருந்து அவர் வீட்டுக்குச் செல்லக் கூடாது. தவறை உணர்ந்து விட்டார் எனவே அவரை ஆதரித்து மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதை நாங்கள் முயற்சிக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT