இங்கிலாந்து வீரர் ஜோ டென்லியின் டெஸ்ட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து விட்டது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று தொடங்கும் ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டிக்கு டென்லி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதே போல் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் உட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஜோ ரூட் கேப்டனாக அணிக்குத் திரும்புகிறார்.
முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து மீள இங்கிலாந்து சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. ஆண்டர்சன் காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் டெஸ்ட் போட்டியில் 40 ஒவர்களை வீசினார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் அவர் பவுலிங்கும் பந்து பழசானவுடன் நேர் நேர் தேமாவாகி பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகிவிடுகின்றனர்.
ஆண்டர்சன், மார்க் உட்டிற்குப் பதில் சாம் கரன் மற்றும் ஓலி ராபின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். நிச்சயம் பிராட் இந்த டெஸ்ட்டில் ஆடுவார், ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் காரணமில்லாமல் உட்கார வைத்ததில் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஆண்டர்சன், பிராட் இணைந்து ஆடி 116 டெஸ்ட்களில் 883 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.