விளையாட்டு

விராட் கோலியின் ஒரு ஷாட்... கேரி கர்ஸ்டனின் அட்வைஸ்: எழுச்சியின் பின்னணியில் பயிற்சியாளர்

செய்திப்பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டுக்குள் விராட் கோலி நுழைந்த போது இந்தியாவின் வெற்றி பயற்சியாளர் கேரி கர்ஸ்டன் கொடுத்த ஒரு அறிவுரை விராட் கோலி பேட்டிங்கின் போக்கையே மாற்றி இன்று ஒரு பெரிய பேட்டிங் ஸ்டாராக கோலி திகழ்கிறார்.

இது தொடர்பாக கேரி கர்ஸ்டன் நிகழ்ச்சி ஒன்றில் கூறிய போது, “நான் முதன் முதலில் விராட் கோலியைச் சந்தித்த போது பெரிய திறமைகளைக் கைவசம் வைத்திருந்ததைக் கண்டேன். இளம் வீரராக இருந்தார். ஆனால் அவர் தன் திறமைக்கேற்ப ஆடவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. இதனையடுத்து அவரும் நான் நிறைய விவாதித்தோம்.

இதில் ஒரு தருணத்தை என்னால் மறக்க முடியாது, இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடிக்கொண்டிருந்தோம். விராட் நன்றாக ஆடிவந்தார், 30 ரன்கள் என்று ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் உடனே அவர் ரத்தம் சூடேற ஒரு பவுலரை தூக்கி லாங் ஆன் திசைக்கு மேல் சிக்ஸ் அடிக்க ஒரு ஷாட்டை ஆடினார். ஆனால் டீப்பில் கேட்ச் ஆனார்.

அப்போதுதான் நான் அவரிடம் கூறினேன், நீ உன் கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்த வேண்டுமெனில் அந்தப் பந்தை நேராக தட்டி விட்டு ஒரு ரன்தான் எடுத்திருக்க வேண்டும். உன்னால் நிறைய ஷாட்களைத் தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்ட முடியும், ஆனால் இப்படி ஆடுவதில் நிறைய ரிஸ்க் உள்ளது’ என்று கூறினேன்.

அதை அப்படியே பிடித்துக் கொண்ட விராட் கோலி அடுத்த ஒருநாள் போட்டியில் கொல்கத்தாவில் சதம் அடித்தார். பெரிய வீரராகும் அனைத்து திறமைகளையும் கொண்ட அவர் நீண்ட காலம் ஆடி சீரான முறையில் ஆடி ரன்களை எடுக்க வேண்டும் என்பதைத்தான் அவருக்கு அறிவுறுத்தினேன். ” இவ்வாறு கூறினார் கேரி கர்ஸ்டன்.

SCROLL FOR NEXT