கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு மே.இ.தீவுகள் பவுலரும் அடையாத தரவரிசைப் புள்ளிகளை எட்டி மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஐசிசி பவுலிங் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக சவுதாம்ப்டன் டெஸ்ட்டில் ஜேசன் ஹோல்டர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மே.இ.தீவுகளின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 42 ரன்களுக்கு 6 விக்கெட் என்று தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சையும் ஹோல்டர் சாதித்தார். அந்த டெஸ்ட்டில் மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இரண்டு இன்னிங்ஸ்களிலும் கைப்பற்றினார்.
இந்நிலையில் தான் வாழ்நாளின் சிறந்த தரவரிசைப் புள்ளிகளான 862 புள்ளிகளைப் பெற்று ஐசிசி பவுலிங் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2000த்தில் வால்ஷ் 866 புள்ளிகளைப் பெற்ற பிறகு 862 புள்ளிகளைப் பெறும் 2வது மேஇ.தீவுகள் பவுலர் ஆனார் ஹோல்டர்.
மற்றபடி பேட்டிங் தரவரிசையில் ஸ்மித் முதலிடம் விராட் கோலி 2ம் இடம் புஜாரா மற்றும் ரஹானே முறையே 7 மற்றும் 9ம் இடங்களில் டாப் 10-ல் உள்ளனர். பவுலிங் தரவரிசையில் பும்ரா மட்டுமே டாப் 10-ற்குள் 7ம் இடத்தில் இருக்கிறார்.