விளையாட்டு

தோனியுடன் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்ட தருணங்கள் பல: கம்பீரின் சுவாரஸிய அனுபவப் பகிர்வு

செய்திப்பிரிவு

இந்திய முன்னாள் கேப்டன் தோனியுடன் கிரிக்கெட் காலத்தில் அறைத்தோழனாகப் பழகிய காலத்தை கவுதம் கம்பீர் அசை போட்டார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இந்த அனுபவங்களை விதந்தோதிக் கூறினார்.

2004-ம் ஆண்டு ஜிம்பப்வே தொடரில் தோனியின் அறைத்தோழர் கம்பீர். அந்த ஆரம்பக் காலமெல்லாம் ஹேர்ஸ்டைல் பற்றியே இருவரும் அதிகமாக விவாதித்ததாகக் கூறிய கம்பீர், ஒருமுறை தரையில் இருவரும் உறங்கியதாகவும் தெரிவித்தார்.

“அப்போதெல்லாம் நீளமாக முடி வைத்திருப்பார் தோனி, அதைப்பற்றி அவர் அதைப் பராமரிப்பது பற்றியே அடிக்கடி பேசுவோம்.

ஒருமுறை சிறிய அறை எங்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தரையில் படுத்து உறங்கினோம். சிறிய அறையை எப்படிப் பெரிதாக்குவது என்பதை பற்றி யோசித்தோம். அறையிலிருந்து கட்டிலைத் தூக்கி வெளியே போட்டு விட்டால் அறை இருவருக்கு போதுமானதாக இருக்கும் என்று கட்டில்களை அகற்றினோம். தரையில் படுத்தோம். அது ஒரு சிறந்த தருணம்.

கென்யாவுக்கு இருவரும் சென்றிருக்கிறோம். ஜிம்பாப்வேவுக்கு இந்தியா ஏ தொடருக்காகச் சென்றிருக்கிறோம். நிறைய நேரம் ஒன்றாகச் செலவிட்டுள்ளோம். ஒருவருடன் ஒன்றரை மாதகாலம் அறையைப் பகிர்கிறோம் என்றால் அவரைப்பற்றி நமக்கு அதிகம் தெரியும் என்று அர்த்தம்.

தோனிக்கு கேப்டனாக அதிர்ஷ்டம் இருந்தது, அவர் காலத்தில் பெரிய வீரர்கள் அணியில் இருந்தனர். சச்சின், சேவாக், நான், யுவராஜ், யூசுப் பத்தான், விராட் கோலி, ரெய்னா என்று பிரமாதமான அணி கைவசம் இருந்தது. எனவே 2011 உலகக்கோப்பை அணியை கேப்டன்சி செய்வது தோனிக்கு எளிதாக இருந்தது. நல்ல சிறப்பான அணி அவருக்குக் கிடைத்தது. ஆனால் கங்குலி தலைமையில் அவர் இதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நல்ல அணி இருந்ததால்தான் தோனி கோப்பைகளை வெல்ல முடிந்தது” என்றார் கவுதம் கம்பீர்.

SCROLL FOR NEXT