இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஆவேசப்போக்கினால் ஒரு போட்டி தடை செய்யப்பட்ட இசாந்த் சர்மா, நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அஸ்வின் கூறியதாவது:
"ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் இருப்பதே நல்லது. கிரிக்கெட் ஆடும் அனைவருமே ஆக்ரோஷமாக ஆடவே விரும்புவர். சிலர் உள்ளார்ந்து ஆவேசமாக இருப்பர், சிலர் வெளிப்படையாக ஆவேசம் காட்டுவர். ஆனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், பாடம் கற்றுக் கொள்வது அவசியம். இசாந்த் ஆக்ரோஷமடைந்தார், அதனால் நமக்கு போட்டியை வெற்றிபெறச் செய்தார்.
அவரது பங்களிப்பை நாம் எளிதில் தள்ளிவிடமுடியாது. அவர் இந்த விஷயத்தில் எல்லை மீறியிருக்கலாம், அதற்காக ஒரேயடியாக அவரைப் போட்டு தாக்குதல் விமர்சனம் செய்யக் கூடாது என்றே நான் கருதுகிறேன். அவர் நிச்சயம் இதிலிருந்து பாடம் கற்று கொள்வார், மீண்டும் வரும்போது, கட்டுப்பாடுடன் கூடிய ஆக்ரோஷத்தை காண்பிப்பார். இன்னும் நிறைய போட்டிகளில் வெற்றி தேடி தருவார்.
நான் எனது புலத்தில் மிகச்சிறந்தவனாக விளங்க வேண்டும் என்று நினைப்பவன். நான் இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். நான் பஸ் கண்டக்டராக அல்லது டிரைவராக இருந்தாலும் அதில் உலகில் சிறந்தவனாக விளங்கவே நினைப்பேன். இதுதான் எனக்கும் விராட் கோலிக்கும் உள்ள பொதுவான மனநிலை இந்த மனநிலை உதவுகிறது.
எப்போதும் அவர் பந்தை என்னிடம் கொடுக்கும் போதும், நான் என்ன விரும்புகிறேனோ அதனை செய்து காட்டவே விழைவேன். அதனை செய்தும் காட்டியிருக்கிறேன். இது எனக்கும் கோலிக்கும் மட்டுமல்ல, கோலி மற்ற வீரர்களிடத்திலும் அப்படித்தான் உள்ளார். அவர் யாருக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் தடையைத் தாண்டி வர உதவி புரிவார்.
இலங்கை, இந்திய அணிகளை எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் உள்ளன. வீரர்களின் அனுபவ அளவிலும், இரு அணிகளும் சமமாகவே உள்ளன. அதனால் 0-1 என்ற பின்னடைவிலிருந்து 2-1 என்று வென்றதை ஏன் ஒரு பெரிய முயற்சி என்று பார்க்கக் கூடாது?
இவ்வாறு கூறினார் அஸ்வின்.