விளையாட்டு

பாலில் இருந்து ஈ-யை வழித்து எறிவது போல் ரஹானேவை ஒருநாள் அணியிலிருந்து எறிந்து விட்டார்கள்: ஆகாஷ் சோப்ரா வேதனை

இரா.முத்துக்குமார்

ஒருநாள் கிரிக்கெட்டில் ரஹானே ஸ்ட்ரைக் ரேட் மோசம் என்று சொல்ல முடியாத 79 ரன்கள். 3 சதங்கள் 24 அரைசதங்கள் எடுத்துள்ளார். இவரை இந்நேரம் யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகே வலுவான 4ம் நிலை வீரராக வளர்த்தெடுத்திருக்க வேண்டும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

அஜிங்கிய ரஹானே கடைசியாக 2018-ல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடினார். 2019 உலகக்கோப்பை அணியில் அவர் இல்லை.

2015 உலகக்கோப்பையில் ரஹானே 4ம் நிலையில் இறங்கினார். அதில் கூட மோசமாக ஆடினார் என்று கூற முடியாது, சுமாராக ஆடினார். மிடில் ஓவர்களில் சொதப்பியதால் அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் யூ டியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது, “4ம் நிலையில் ரஹானேயின் பேட்டிங் புள்ளி விவரங்கள் நன்றாகவே உள்ளது. நல்ல ஆட்டங்களை ஆடும்போதும், ஸ்ட்ரைக் ரேட்டும் 94 பக்கம் இருக்கும் போது ஏன் அதிக வாய்ப்புகள் வழங்குவதில்லை?

திடீரென அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பாலில் இருந்து எப்படி ஈயை எடுத்து தூரப்போடுவோமோ அப்படி போட்டு விட்டனர். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? உண்மையில் அவருக்கு நியாயம் செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்து போல் ஒவ்வொரு போட்டியிலும் 350 ரன்களுக்கா நாம் குறிவைக்கிறோம். இல்லை. அது அவர்களுக்கு ஒத்து வரும் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் அப்படி ஆடுகிறார்கள், நாம் அப்படி ஆட முடியுமா? நாம் இன்னமும் கிரிக்கெட்டை மரபான முறையில் ஆடுபவர்கள்தான்.

இன்னிங்சைக் கட்டமைத்து 320-325 ரன்களை நாம் எடுக்க முடியும். அதற்கேற்ப அணியைத் தேர்வு செய்தால் அதில் அஜிங்கிய ரஹானே அருமையாகப் பொருந்துவார்.

ஒருநாள் அணியிலிருந்து அவரை நீக்கும்போது அவர் நன்றாகத்தான் ஆடிவந்தார். நன்றாக ஆடும்போது ஒருவரை அணியிலிருந்து அகற்றுவது சரியல்ல.

தென் ஆப்பிரிக்காவிலும் அவர் ஆடினார், நன்றாகவே ஆடினார். மீண்டும் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார் ஆகாஷ் சோப்ரா.

ஆனால் விராட் கோலியின் மனோவியல் தெரிந்தால் சோப்ரா இப்படி ஆதங்கப்பட வாய்ப்பில்லை, கேப்டனாகக் கூடிய இன்னொரு நபரை கோலி எப்போதும் விரும்ப மாட்டார் என்பதை நாம் அவரது அணித்தேர்வு முறைகளை வைத்து எளிதில் கூறி விட முடியும். தோனி அருமையாகப் பயன்படுத்திய அஸ்வினை ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து நீக்கியதைப் பார்க்கிறோம் என்று கோலி மீது ஏற்கெனவே விமர்சனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT