இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, இலங்கை தொடர், தனது பங்களிப்பு, மற்ற பயிற்சியாளர்கள் பங்களிப்பு, அணி வீரர்கள் ஆகியோர் செயல்பாடுகளை விரிவாக விவாத்தார்.
பிசிசிஐ.டிவி இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதன் முக்கிய அம்சங்கள்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் பற்றி...
தென் ஆப்பிரிக்கா உலகின் நம்பர் 1 அணியாகும். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க நீண்ட கால அளவுக்கு சீரான முறையில் நாம் விளையாட வேண்டும். இதுதான் நமது திட்டம். எங்களது ஆட்ட பாணியில் மாற்றமிருக்காது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடிய போது நீங்கள் பார்த்திருக்கலாம். சீரான கிரிக்கெட் என்பதே வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி என்பது தெரிய வந்திருக்கும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நீடித்த சிறப்பான ஆட்டம் என்பதே மிக முக்கியமானது.
நெருக்கடியில் இருக்கும் எதிரணியினரை அதிலிருந்து மீள நாம் அனுமதிக்கக் கூடாது. இதற்கு நிறைய பொறுமை தேவை. ஆஸ்திரேலியாவில் இத்தகைய பொறுமை இல்லை. இலங்கைக்கு எதிராகவும் முதல் டெஸ்ட் போட்டியில் இத்தகைய பொறுமை இல்லை. கட்டுக்கோப்பும், பொறுமையும் வந்த பிறகு 2 மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் முடிவுகளை நாமே பார்த்தோம்.
இசாந்த் சர்மா பற்றி...
உலகக் கோப்பையின் போது அவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது பெரிய ஏமாற்றமும் பின்னடைவுமாகும். ஆனால் அவரே நேர்மையாக விலகினார், இப்படிப்பட்ட தியாகங்கள் மூலம் அவருக்கு இன்று நல்லது நடைபெற்றது. நன்றாக ஒய்வு எடுத்தார். பிறகு கடும் பயிற்சியில் ஈடுபட்டார். தனது உத்தியை புரிந்து கொண்டார், எங்கு மேம்பாடு தேவை என்பதையும் அறிந்தார். இலங்கையில் அவர் வீசியது மில்லியன் டாலர்கள் மதிப்பு மிக்கப் பந்து வீச்சு. ஆனால் அது அவரது இறுதியல்ல. எதிர்காலத்திலும் அவர் இப்படித்தான் வீசப் போகிறார். தற்போதுதான் அவரது பந்து வீச்சு பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அவர் ஆவேசமாகச் செயல்பட்டார், ஆனால் எத்துடன் அதை நிறுத்துவது என்பதை அறிவார். ஆனால் அவருக்கு அணியினரின் ஆதரவு உண்டு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவர் ஆவேசமாக செயல்படவே விரும்புகிறேன், அந்தத் திசை நோக்கி அவரை நகர்த்துவது நானாகவே இருக்கும். ஆனால் வரம்பு என்னவென்பதையும் நான் அவருக்கு கூறுவேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாம் அவரை இழ்ந்திருக்கிறோம். அவர் தனது வாழ்வின் சிறந்த பார்மில் உள்ளார்.
அஸ்வின் பந்துவீச்சு பற்றி..
இலங்கையில் அஸ்வின் அசத்தினார், காரணம் அவர் மிகவும் ரிலாக்ஸாகவும் பொறுமையாகவும் செயல்பட்டதே. அவரிடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டார். இதனை அவர் உணர்ந்து விட்டார். அமைதியுடன், சாதுரியமும், புத்திசாலித்தனமும் அவரிடம் சேர்ந்துள்ளது. உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் தற்போது அஸ்வினே. நேதன் லயன் நல்ல ஆஃப் ஸ்பின்னர்தான், ஆனால் அஸ்வினிடம் உள்ள தினுசு தினுசான பந்துவீச்சு அவரிடம் இல்லை. குமார் சங்ககாராவுக்கு அவர் வீசிய விதம் இதனை நமக்கு உணர்த்துகிறது. சங்கா போன்ற ஒரு அற்புதமான பேட்ஸ்மெனை 4 முறை நிறுத்தி எடுப்பதெல்லாம் அரிதான ஒரு காரியம்.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறினார் ரவி சாஸ்திரி.