ஜூலை 7ம் தேதி 1981-ல் இப்போதைய ஜார்கண்ட், அப்போதைய பிஹார் மாநில ராஞ்சியில் பிறந்தார் தோனி. இன்று அவரது 39வது பிறந்த தினம்.
‘தல’ தோனி என்று செல்லமாக சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி 1999-00-ல் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 2004இல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். ஓராண்டுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதிரடி வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் விறுவிறுவென வளர்ந்து 2007 டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாகவும் ஆகி, தன் அறிமுக கேப்டன்சி தொடரிலேயே அதுவும் பரம வைரி பாகிஸ்தானை இறுதியில் வீழ்த்தி கோப்பையை வென்று புகழ்பெற்றார்.
அடுத்தக்கட்டமாக 2011 உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் கோப்பைகளை வென்று 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக வலம் வருகிறார். 2015 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை இவரது கேப்டன்சியில் இந்திய அணி வந்தது.
ஏகப்பட்ட இருதரப்பு ஒருநாள் தொடர்களை இந்திய அணி இவரது தலைமையில் வென்றுள்ளது, 2009-ல் இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற இடத்துக்கு இட்டுச் சென்றார். 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 2017-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
உலகின் சிறந்த பினிஷர் என்று கூறுமளவுக்கு இந்திய அணியை ஏகப்பட்ட போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 போட்டிகளில் 4876 ரன்களை எடுத்துள்ளார், இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் எடுத்த இரட்டைச் சத 224 ரன்களை மறக்க முடியாது.
350 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10,773 ரன்களைக் குவித்துள்ளார். 10 சதங்கள், 73 அரைசதங்கள். 323 கேட்ச், 123 ஸ்டம்பிங், 98 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1617 ரன்களை எடுத்துள்ளார். 2 அரைசதங்கள்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த 4வது வீரர், உலக அளவில் 12வது வீரர். இதனை 273 போட்டிகளில் அவர் சாதித்துள்ளார். 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டினார்.
இவர் பெரிய பினிஷர் என்று பெயர் எடுத்தாலும் 2005ல் இலங்கைக்கு எதிராக இலக்கை விரட்டும் போது 3ம் நிலையில் இறங்கி எடுத்த அதிரடி 183 ரன்களை மறக்க முடியாது. அதன் பிறகே அந்த தோனியைக் காணோம், அதே போல் பாகிஸ்தானை புரட்டி எடுத்த 136 ரன்களையும் மறக்க முடியாது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர், உலக அளவில் 5வது வீரர்.
விக்கெட் கீப்பராக டெஸ்ட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பரும் தோனி ஆவார்.
3 வடிவங்களிலும் சேர்த்து 829 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார், மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட் வரிசையில் அடுத்ததாக தோனி உள்ளார்.
கேப்டன்சியில் ஒருநாள் போட்டிகளில் 199 போட்டிகளில் தலைமை தாங்கி 110 வெற்றி 74 தோல்விகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
60 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய தோனி 27 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் 72 போட்டிகளில் இவர் தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் வென்றுள்ளது.
2007-ல் நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை பெற்றார்.
2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பிறகு இவர் இன்னமும் கிரிக்கெட் பக்கம் வராததால் ரசிகர்கள் ஏங்கியே போயுள்ளனர். விரைவில் வா தலைவா என்பதுதான் அவர்களது வேண்டுதலாக இருக்கும்.
சாதனைகள் பல படைத்த கேப்டன் கூல், கிரேட் பினிஷர் பிறந்த தினத்தில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நாமும் அவரை வாழ்த்துவோம்.