இலங்கை, யுஏஇ, நியூஸிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் பணமழை ஐபிஎல் போட்டிகளை நடத்த முன் வந்துள்ளது, ஆனால் முதல் முன்னுரிமை இந்தியாவில் நடத்தவே வழங்கப்படுவதாக பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை டி20 செப்டம்பரில் நடக்காது என்பதால் அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஐசிசி தொடரை முடக்கி விட்டு தனியார் பணமழை தொடரை நடத்த அனுமதிக்கலாமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன, இன்று பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கும் ஐபிஎல் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறும்போது, “நியூஸிலாந்து, யுஏஇ, இலங்கை போன்ற வாரியங்கள் ஐபிஎல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் முன்னுரிமை போட்டிகளை இந்தியாவில் நடத்தவே வழங்கப்படுகிறது” என்றார்.
நியூசிலாந்து தன்னை கோவிட்-19-லிருந்து விடுபட்டதாக அறிவித்த நிலையில் சில ரக்பி போட்டிகளை ரசிகர்கள் கூட்டத்துடன் நடத்தியது.
ஆனால் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் தொலைக்காட்சி நேரலை நேரங்கள் நியூஸிலாந்தில் நடத்துவதற்கான தடையாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆனால் இது தொடர்பாக அணி உரிமையாளர்கள், தங்களுக்கு எந்த வித செய்தி தொடர்பும் இல்லை, முந்தைய தகவல்களின் படி ஐபிஎல் நடக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் வழிகாட்டு நெறிமுறைகளுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். எங்களுக்கு இது பற்றி தெளிவாக தெரியப்படுத்த வேண்டும், என்று கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடங்கி விடும், ஆனால் இம்முறை அதுவும் வாய்ப்பில்லை என்ற நிலையில் உள்நாட்டுத் தொடர்களை விடவும் ஐபிஎல் கிரிக்கெடுட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுமா என்பதும் தெரியவில்லை.