விளையாட்டு

எப்போதும் முதல் பந்தை நானே எதிர்கொள்கிறேன், நீங்களும் சந்திக்க வேண்டும்: சச்சினிடம் கூறிய கங்குலி

ஏஎன்ஐ

ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி இறங்கும்போது சச்சின் முதல் ஓவர் முதல் பந்தை எதிர்கொள்வதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வார், ரன்னர் முனைக்கு நேராகச் சென்று விடுவார், இதனால் பெரும்பாலும் தானே முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்க நேரிட்டுள்ளது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை சச்சின் தன்னிடம் கூறியதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் மயங்க் அகர்வாலுடனான வீடியோ உரையாடலில் கங்குலி இது தொடர்பாகக் கூறியதாவது:

ஆம்! எப்போதும் என்னைத்தான் முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்குமாறு சச்சின் கூறுவார். அதற்கு அவரிடம் எப்போதும் விடையிருந்தது. நான் சில சமயங்களில் அவரிடம் கூறுவதுண்டு, ‘சில வேளைகளில் நீங்களும் முதலில் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும், நான் தான் எப்போதும் முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்கிறேன், என்று.

ஆனால் இதற்கு சச்சின் 2 பதில்களை வைத்திருந்தார். ஒன்று அவர் நல்ல ஃபார்மில் இருந்தால் அந்த பார்ம் தொடர வேண்டும் அதற்கு ரன்னர் முனையில் இருப்பதே சிறந்தது என்பார். அவுட் ஆஃப் பார்மில் இருந்தால் அப்போதும் தான் எதிர்முனையில் இருப்பதே சிறந்தது, ஏனெனில் அது தன் மீது அழுத்தத்தை குறைக்கிறது என்பார்.

எனவே நல்ல பார்ம், பார்ம் இல்லை இரண்டிற்குமே அவரிடம் பதில்கள் உண்டு.

அதாவது சில வேளைகளில் டிவியில் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிட்ட நிலையில் நானும் அவரும் இறங்கும்போது அவரைத் தாண்டி நான் ரன்னர் முனையில் போய் முதலிலேயே நின்று விட்டால் அப்போது அவர் முதலில் ஸ்ட்ரைக் எடுத்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும். இது போன்று ஓரிருமுறை நடந்ததுண்டு, என்றார் கங்குலி.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியான இவர்கள் இருவரும் சேர்ந்து 176 இன்னிங்ஸ்களில் 8,227 ரன்களை 47.55 என்ற சராசரியில் எடுத்து உலக சாதனை வைத்துள்ளனர், வேறு எந்த ஜோடியும் இதுவரை 6,000 ரன்களைக் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT