ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டி, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை ஒத்திவைத்துவிட்டு, அந்த அட்டவணையில் இந்தியாவின் ஐபிஎல் டி20 தொடரை நடத்தினால் பல்வேறு கேள்விகள் எழும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்
வரும் அக்டோபர் மாத 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பையும் நடக்க உள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. 7 நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன
ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை நடத்தலாமா என்பது குறித்து ஐசிசி இறுதி முடிவு எடுக்கவில்லை. அந்த முடிவுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.
ஒருவேளை உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டால் அந்தக் கால அட்டவணையில் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் வரவில்லை
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இன்று பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் ஐபிஎல் டி20 டி20 தொடர், இந்தியா-ஆஸ்திரேலியத் தொடர், உலகக்கோப்பை டி20 போட்டித் தொடர் ஆகிய தேதிகளிடையே குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வருகின்றன. ஒருவேளை கரோனா வைரஸ் அச்சம் காரணமாக டி20 உலகக்கோப்பை போட்டித்தொடர் நடக்காவிட்டால் ஐபிஎல் தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடத்தப்படலாம் எனப் பேசப்படுகிறது..
ஐசிசியில் பிசிசிஐ அமைப்பு மிகவும் வலிமை பொருந்தியதாக இருந்து வருகிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
கரோனா வைரஸைக் காரணமாகக் கூறி, ஆஸ்திேரலியா கிரிக்கெட் அமைப்பு டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரை நடத்த முடியாது என்று எளிதாகக் கூறிவிடலாம். அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால், உலகக்கோப்பைப் போட்டி ரத்து செய்யப்பட்ட அதே நேரத்தில் ஐபிஎல் டி20 போட்டித் தொடரும் நடந்தால், பல்வேறு சந்தேகங்களும், பல கேள்விகளையும் எழுப்ப வேண்டியது இருக்கும்
ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்து நாட்டில், 12 முதல் 14 அணிகள் பங்கேற்கும் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்த முடியாதா என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை ஐபிஎல் டி20 தொடர் நடத்துவதற்கு சாதகமான வாய்ப்பை ஐசிசி உருவாக்கிக் கொடுக்கக் கூடாது, அனுமதிக்கவும் கூடாது. இதன் மூலம் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு பதிலாக, தனியார் லீக்கில் விளையாடவே இளம் வீரர்கள் ஆர்வமாக இருப்பார்கள்
உலகக்கோப்பைத் தொடரில் 16 அணிகள் பங்கேற்கு விளையாடுவது என்பது கடினமான செயல்தான், இப்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது சாத்தியம் அல்ல என்பது தெரியும். ஆனால் இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒரு அணிக்கே இத்தகையபாதுகாப்பு என்றால் 16 அணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்
செப்டம்பர் மாதம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. ஆனால், தி்ட்டமிட்டபடி நடக்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை நடத்தும் சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு காரணங்களுக்காக நடுநிலையான நாட்டில் நடத்துவோம்.
ஐசிசி, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியம் ஆகியவை அமர்ந்து பேசி, சர்வதேச போட்டிகள் நடக்கும் போது, தனியார் நடத்தும் கிரி்க்கெட் லீக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும்
இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்