டி-20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரானமயங்க் அகர்வால் உடன் ட்விட்டரில் கலந்துரையாடினார். அப்போது கங்குலி கூறும்போது, ‘‘டி-20மிக முக்கியமானது, நான் எனது விளையாட்டை மாற்றியிருப்பேன். இந்த வடிவிலான ஆட்டம் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதற்கான உரிமையை வழங்குகிறது. ஐபிஎல் முதல் ஐந்து ஆண்டுகளில் நான் விளையாடி இருந்தாலும், மேலும் டி-20 விளையாடுவதை நான் விரும்பி இருப்பேன். நான்டி-20 வடிவத்தை அனுபவித்திருப்பேன்’’ என்றார்.
கடந்த 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவை வழிநடத்தி சென்றது குறித்தும், 2002-ம் ஆண்டில் நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய போது லார்ட்ஸ் பால்கனியில் இருந்து அணியின் சீருடை கழற்றி சுற்றியது குறித்தும் கங்குலி பேசும்போது, ‘‘நாட்வெஸ்ட் டிராபியை வென்றது சிறந்த தருணம். இதுபோன்ற வகையில் விளையாட்டை வென்றால் கொண்டாட்டமும் அதிகமாகவே இருக்கும். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஒருசிறப்பு இடம் உண்டு. நாங்கள் ஆஸ்திரேலியாவால் அடித்து நொறுக்கப்பட்டோம், அந்த தலைமுறையில் அவர்கள் சிறந்த அணியாக இருந்தனர். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவைத் தவிர ஒவ்வொரு ஆட்டத்தையும் வெல்வது ஒரு பெரிய சாதனை என்று நான் நினைத்தேன். நாட்வெஸ்ட் தொடர் அதன் சொந்த அழகைக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் அதிலும்லார்ட்ஸில் மைதானத்தில் சனிக்கிழமையன்று, மைதானம் முழுவதும் ரசிகர்கள் வெள்ளத்தில் கோப்பை வென்றது என்பது உணர்வுப்பூர்வமான விஷயத்தை கொண்டதாகும்’’ என்றார்.