விளையாட்டு

உலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்

செய்திப்பிரிவு

உலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம் என்று சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கோர சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31-ந் தேதி இரவு முதல் காணவில்லை. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

போலீஸார் சிறுமியை தேடி வந்த நிலையில் தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் இந்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 25 வயதான பூக்கடை வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த குற்றச்செயலில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.

சிறுமியின் மரணம் தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா"

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT