21ம் நூற்றாண்டின், இந்தியாவின்மதிப்பு மிக்க டெஸ்ட் வீரராக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வு செய்தது விஸ்டன் இந்தியா இதழ்.
‘மோஸ்ட் வேல்யுயபிள் பிளேயர்’ என்பதற்கான எம்விபி ரேட்டிங் 97.3 உடன் 31 வயதான ரவீந்திர ஜடேஜா உலக அளவில் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக 2ம் இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா கூறும்போது, “இந்தியாவுக்காக ஆடுவது ஒரு கனவு. அதோடு மதிப்பு மிக்க வீரராக தேர்வு செய்யப்படுவது மேலும் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்” என்றார் ரவீந்திர ஜடேஜா.
மேலும் ஜடேஜா தெரிவிக்கும் போது, “என் ரசிகர்கள், அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் ஆகியோரது நிபந்தனையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றியைப்பதிவு செய்கிறேன்.” என்றார்.
2012-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 1,869 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் 14 அரைசதங்கள். 213 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
கிரிக் விஸ் அளிக்கும் பகுப்பாய்வுகளின் படி உலகில் ஒவ்வொரு வீரருக்கும் எம்விபி ரேட்டிங் அளிக்கப்படும், புள்ளி விவர மாதிரி அடிப்ப்படையில் போட்டியில் குறிப்பிட்ட வீரர் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் இந்த எம்விபி ரேட்டிங் அளிக்கப்படும்.
இது தொடர்பாக கிரிக் விஸ் அனலிடிக்ஸின் ஃப்ரெடி வைல்ட் கூறும்போது, “ஜடேஜா இந்தியாவின் நம்பர் 1 என்று வந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனெனில் டெஸ்ட் அணியில் அவர் இடம் நிரந்தரமல்ல. முதல் வரிசை பவுலராக அவர் தேர்வு செய்யப்படுகிறார். பேட்டிங்கில் 6ம் நிலையில் களமிறங்குகிறார். போட்டியில் தன்னை சகல விதங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டு பங்களிப்பு செய்கிறார்” என்றார்.
மொத்த ரன் எண்ணிக்கை, விக்கெட் எண்ணிக்கை அடிப்படையில் ஜடேஜா தேர்வு செய்யப்படவில்லை. அவர் போட்டியில் ஏற்படுத்தும் தாக்கம் தான் முக்கியம். அவரது பேட்டிங் பவுலிங் சராசரி வித்தியாசம் 10.62 ரன்கள். இது இந்த நூற்றாண்டில் குறைந்தது 150 விக்கெட்டுகள், 1000 ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது சிறந்த சராசரி வித்தியாசமாகும் என்கிறார் அனலிடிக்ஸின் ஃப்ரெடி வைல்ட்.