விளையாட்டு

கேப்டன்சி ‘நெகெட்டிவ்’ ஆகி விட்டது; ஆக்ரோஷம் இல்லை: எல்.சிவராமகிருஷ்ணன் விமர்சனம்

செய்திப்பிரிவு

கேப்டன்சி வரவர எதிர்மறையாகச் செல்கிறது, ஸ்பின்னர்களுக்கு எதிராக உள்ளது என்று முன்னாள் இந்திய ஸ்பின்னரும் தமிழக வீரருமான எல்.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

யூடியூப் சேனலில் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு இந்திய அணி வீரர் டபிள்யு.வி.ராமனிடம் அவர் உரையாற்றும்போது கூறியதாவது:

ஸ்பின்னர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இப்போது உள்ள ஸ்பின்னர்கள் முயற்சித்து வருகிறார்கள், ஆனால் இவர்களுக்கு பிறகு ஸ்பின் வீசும் கலை அழிந்து விடும். இந்தியாவில் நல்ல ஸ்பின்னர்கள் கிடைப்பார்கள் என்று நான் கருதவில்லை.

கேப்டன்சி இப்பொதெல்லாம் ரன் கொடுக்கக் கூடாது, டைட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஸ்பின்னர்களுக்கு அருகில் நெருக்கமாக களவியூகம் அமைப்பதில்லை, தூரத்தில் நிறுத்தி மட்டையாளர்கள் செய்யும் தவறை நம்பியிருக்கிறது. இதனால் ஸ்லிப், பார்வர்ட் ஷாட் லெக் இல்லை.

நான் சுனில் கவாஸ்கர் தலைமையில் நன்றாக வீசியதாகக் கருதுகிறேன். ஆனால் கபில்தேவ் தலைமையில் அல்ல. கபில் உள்ளுணர்வான கேப்டன், கவாஸ்கர் திட்டமிடுபவர். நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவுபடுத்தி விடுவார் கவாஸ்கர்.

ஸ்பின்னர்களின் வளர்ச்சியில் கேப்டன்சி பெரும்பங்கு வகிப்பதாக நான் கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் எல்.சிவராம கிருஷ்ணன்.

SCROLL FOR NEXT