நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே?"
இவ்வாறு ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.