அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் ரஞ்சித் மகேஸ்வரியின் பெயரை மீண்டும் பரிந்துரைத்துள்ளது இந்திய தடகள சம்மேளனம்.
கடந்த ஆண்டும் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 2008-ல் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதால் விருது வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மத்திய அரசு அவருக்கு விருது வழங்க முடியாது என தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் அவருடைய பெயரை பரிந்துரைத்துள்ளது இந்திய தடகள சம்மேளனம்.
இது தொடர்பாக இந்திய தடகள சம்மேளனத்தில் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அல்லது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தின் மூலம் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப் பட வேண்டும். அதில் சம்பந்தப் பட்ட நபர் ஊக்கமருந்து பயன்படுத் தியது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவருக்கு விருது வழங்க முடியாது என மத்திய விளையாட்டு அமைச்சக விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரஞ்சித் மகேஸ்வரியின் மாதிரிகளை பரிசோதனை செய்த தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்துக்கு (என்டிடிஎல்) 2009-ல் தான் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த முறை ரஞ்சித்தின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளோம். புதிதாக அமையவுள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.