விளையாட்டு

சீனாவில் தயாரான எந்த ஒரு உபகரணத்தையும் பயன்படுத்த மாட்டோம்: இந்திய பளுதூக்குதல் அமைப்பு முடிவு

செய்திப்பிரிவு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற விளையாட்டு உபகரணங்களைப் புறக்கணிக்கப் போவதாக இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் ஊடுருவி 20 ராணுவ வீரர்களை கொன்றதோடு நிலப்பகுதிகளையும் அபகரிக்க சீனா திட்டமிட்டு படைகளைக் குவித்து வரும் நிலையில் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க நாடு முழுதும் அலை எழுந்துள்ளது.

ஐபிஎல் ஸ்பான்சரான விவோ-வை புறக்கணிக்க முடியாது என்று பிசிசிஐ தெரிவித்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கமும் சீனப்பொருட்களைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. தற்போது இந்திய பளுத்தூக்குதல் கூட்டமைப்பும் பட்டியலில் சேர்ந்துள்ளது.

பளுத்தூக்குதல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறும்போது, “சீனாவில் தயாரான எந்த ஒரு உபகரணத்தையும் பயன்படுத்த மாட்டோம். இந்தியாவில் தயாராகும், மற்றும் பிற நாட்டில் தயாராகும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம்.

தேசியப் பளுத்தூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சீன உபகரணங்களைத்தான் பயன்படுத்த உள்ளனர். எனவே இதைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கடந்த ஆண்டு சில உபகரணங்களை வாங்கினோம்.

ஆனால் சீன உபகரணங்கள் தரமற்றவையாக உள்ளன. மேலும் பயிற்சி முகாமில் உள்ள வீரர், வீராங்கனைகள் சீனப் பொருட்களைப் பயன்படுத்தும் மனநிலையில் இல்லை. டிக்-டாக் செயலிகளையே புறக்கணித்து விட்டனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது கூட சீனப் பொருட்களை வாங்க மறுக்கின்றனர்.

தற்போது ஸ்வீடன் நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்’ என்றார்.

SCROLL FOR NEXT