விளையாட்டு

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சாய்னா, காஷ்யப்

பிடிஐ

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி யில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனை யான சாய்னா நெவால் 21-14, 22-20 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் புஸானன் ஆங்பும்ருங்பானை தோற்கடித்தார்.

சாய்னா தனது 2-வது சுற்றில் ஜப்பானின் மினாட்சு மிடானியை சந்திக்கிறார். மிடானி தனது முதல் சுற்றில் 21-13, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் இந்தியாவின் பி.வி.சிந்துவைத் தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் காஷ்யப்பை எதிர்த்து விளையாடிய ஜப்பானின் டகுமா உயேடா முதல் செட்டிலேயே காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியாவின் அஜய் ஜெயராம் 10-21, 10-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சனிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 20-22, 21-18, 13-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சீனாவின் ஸாவ் யூன்லெய்-ஸாங் கியான்ஸின் ஜோடியிடம் தோல்வி கண்டது.

மற்றொரு மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் ஜப்பானின் மிசாக்கி மட்சூடோமா-அயாக்கா ஜோடி 21-6, 21-17 என்ற நேர் செட்களில் இந்தியாவின் பிரதன்யா காட்ரே-சிக்கி ரெட்டி ஜோடியைத் தோற்கடித்தது.

SCROLL FOR NEXT