விளையாட்டு

2007-ல் சச்சின் டெண்டுல்கர் மனச்சோர்வில் இருந்தார், கிரிக்கெட்டை விட்டுவிட நினைத்தார்: கேரி கர்ஸ்டன்

செய்திப்பிரிவு

2007-ல் தான் இந்திய அணியின் பயிற்சியாளராகச் சேர்ந்த போது மன உளைச்சலில் இருந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை விட்டே சென்று விடலாம் என்று நினைத்தார் என்று கேரி கர்ஸ்டன் தெரிவித்துளார்.

கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது சச்சின் டெண்டுல்கரை 2ம் நிலையில் இறங்கப் பணித்தார், இதன் மூலம் மூத்த வீரரான இவர் அணியை கடைசி வரை நின்று வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அது கடும் பின்னடவைச் சந்தித்து 2007 ஐசிசி உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது, இதனால் கிரெக் சாப்பல் மீதும் கேப்டன் ராகுல் திராவிட் மீதும் கடும் பழி விழுந்தது, சச்சின் டெண்டுல்கர் முகபாவத்துலேயே அவர் சோர்வில் இருந்தது பளிச்சிட்டது. கிரெக் சாப்பல் பயிற்சி காலம் மோசமான காலக்கட்டம் என்று பலரும் விமர்சித்தனர்.

கிரெக் சாப்பல் போன பிறகு சச்சின் டெண்டுல்கரும் எழுச்சியுற்றார், இந்திய அணியும் எழுச்சி பெற்றது. கேரி கர்ஸ்டன் அப்போதுதான் பயிற்சியாளர் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் கேரி கர்ஸ்டன் கூறியதாவது:

சச்சின் உடன் நான் ஒரு நீண்ட பயிற்சிப் பயணத்தை மேற்கொண்டேன். அப்போது சச்சின் இருந்த மன நிலையை கூற வேண்டுமென்றால் அவர் கிரிக்கெட்டை விட்டு விட கருதியிருந்தார். கடும் மனச்சோர்வில் இருந்தார்.

தன்னுடைய வழக்கமான இடத்தில் இறங்காமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆட முடியவில்லை என்று அவர் கருதினார், நான் ஒன்றும் செய்யவில்லை அவர் இன்னும் சில காலம் அணியில் நீடிக்க என்ன செய்ய வேண்டுமோ, அவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தேன். அவரிடம் மற்றபடி எதுவும் சொல்ல வேண்டியதில்லை அவருக்கு ஆட்டம் தெரியும்.

அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர் 3 ஆண்டுகளில் 19 சர்வதேச சதங்களை எடுத்தார். அவர் எங்கு ஆட வேண்டும் என்று விரும்பினாரோ அந்த இடத்துக்குச் சென்றார் நாம் உலகக்கோப்பையை வென்றோம்.

இவ்வாறு கூறினார் கேரி கர்ஸ்டன்.

SCROLL FOR NEXT