தனது பயோபிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் இயங்கி வரும் பிரபலங்கள் சிலர் அடிக்கடி அவர்களின் ரசிகர்களைக் கேள்வி கேட்கச் சொல்லி அதற்குப் பதிலளிப்பார்கள். ட்விட்டரில் தொடர்ந்து பகிர்ந்து வரும் பிரபலங்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். இவர் சமீபத்தில் #AskRaina என்ற ஹேஷ்டேகில் தன்னிடம் கேள்விகள் கேட்கும்படி தன் ரசிகர்களைக் கேட்டார்.
அப்போது ஒருவர், "உங்களைப் பற்றிப் படம் எடுத்தால் உங்கள் கதாபாத்திரத்தில் யார் நடிக்க விரும்புவீர்கள், அல்லது நீங்களே நடிப்பீர்களா?" என்று கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ரெய்னா, "துல்கர் சல்மான் அல்லது ஷாகித் கபூர் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.
இதுவரை அசாருதீன், எம்.எஸ்.தோனி ஆகிய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகியுள்ளது. 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையைச் சொல்லும் ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.
நடிகை டாப்ஸி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'சபாஷ் மித்து' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் தேசிய அளவில் அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கும் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Ok I think Dulquer Salmaan or Shahid Kapoor .. what do you suggest
- Suresh Raina