இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று வடிவத்திலும் அசத்துகிறார், ஆனால் அவரிடம் கெய்ல் போலவோ, டிவில்லியர்ஸ் போலவோ, அல்லது காலிஸ், லாரா போலவோ திறமையில்லை, ஆனால் பின் எப்படி விராட் கோலி சிறந்த வீரராகத் திகழ்கிறார் என்பதற்கு கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
82 சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் சராசை 50.8, மொத்த ரன்கள் 2,794.
இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது:
விராட் எப்போதுமே சிறந்த வீரர்தான், ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்குவது சாதாரணமல்ல. டி20-யில் அவர் சிறப்பாக விளங்குவதில் ஆச்சரியம் என்னவெனில் அவர் கெய்ல் போல் உடல் வலுவுள்ளவர் அல்ல. டிவில்லியர்ஸ் போல 360 டிகிரி வீரரும் அல்ல.
தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் போலவும் அல்ல, மே.இ.தீவுகளின் பிரையன் லாரா போலவும் அல்ல, இருப்பினும் கோலி வெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம் கோலியின் உடல் தகுதிதான்.
இன்றைய தேதியில் கோலியை விடவும் உடற்தகுதியை பராமரிக்கும் வீரர்கள் அரிது என்றே கூறலாம். இதுதான் அவரது வலிமை, ரன்கள் எடுக்க அவர் ஓடும் வேகம், ஒன்றை இரண்டாகவும் 2ஐ மூன்றாகவும் மாற்றும் திறமை பெரும்பாலான வீரர்களுக்குக் கிடையாது.
இதுதான் கோலிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.