விளையாட்டு

மறக்க முடியுமா? புரட்டி எடுத்த ரோஹித் சர்மாவின் 140: பாக்.ஐ ஒன்றுமில்லாமல் அடித்த இந்திய வெற்றி

செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 50 ஒவர் போட்டித் தொடரின் 22வது போட்டி வழக்கம் போல் பரமவைரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்றது. இந்திய அணியை உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வென்றதேயில்லை. இதே நாளில் அன்று ரோஹித் சர்மா அடித்த 140 ரன்களை மறக்க முடியுமா?

இந்தியா 7வது முறையாக உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது இதே ஜூன் 16, 2019-ல் தான். ஒருநாளா, டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி 11-0 என்று ஆனதும் இந்நாளில்தான்.மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் மிகப்பெரிய தவறிழைத்தார், டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், அவர் அவ்வாறு செய்யக் காரணம் இந்திய அணியில் விராட் கோலி எனும் விரட்டல் மன்னனோடு, ஹிட் மேன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்ததுதான், அவரை முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்ய வைத்தது.

மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ், சதாப் கான், ஹசன் அலி என்ற திறமை வாய்ந்த பாகிஸ்தான் பவுலிங்குக்கு எதிராக சக்திவாய்ந்த இந்திய பேட்டிங் வரிசை, எனவே மான்செஸ்டரில் இந்த பரபரப்பான் போட்டியைக் காண இந்திய பாக் ரசிகர்களின் கூட்டம் சேர்ந்தது. ஆனால் இது ஒருதலைப் பட்சமாக இந்திய ஆதிக்கப் போட்டியாக முடிந்தது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

ரோஹித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதம் என்று உலகக்கோப்பையின் உச்ச பார்மில் இருந்தார். கே.எல்.ராகுலும் ஒரு ஆச்சரியகரமான கூட்டணியை ரோஹித் சர்மாவுடன் அமைத்தார். இருவரும் சேர்ந்து 23.5 ஒவர்களில் 136 ரன்களைச் சேர்த்தனர், ராகுல் 78 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸ் பந்தில் பாபர் ஆஸமிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 38.2 ஓவர்களில் 234/2 என்றுபெரிய அடித்தளம் அமைந்தது. ரோஹித் சர்மா 113 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உடன் 140 ரன்களை வெளுத்துக் கட்டி ஹசன் அலி பந்தில் ஸ்கூப் ஷாட்டில் பைன்லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

விராட் கோலி இறங்கி மிகப்பிரமாதமான கவர் ட்ரைவ்கள் பிளிக்குகளுடன் 65 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களைச் சேர்க்க மொகமது ஆமிரின் அதிவிரைவு பவுன்சரில் சர்பராஸ் அகமெட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா (26), தோனி (1) ஆகியோரை மலிவாக ஆமிர் வீழ்த்தினார். ஆனாலும் இந்திய அணி 50 ஓவர்களில் 336/5 என்று பெரிய ஸ்கோரை எட்டியது.

இந்தியாவின் டாப் 3 ஆன ராகுல், ரோஹித், கோலி சேர்ந்து 24 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என்று பாகிஸ்தான் பவுலிங்கை பிரித்தனர்.

பாகிஸ்தான் இலக்கை துரத்திய போது இருமுறை மழைக் குறுக்கிட 40 ஓவர்களில் 302 என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தமிழக வீரர் விஜய் சங்கர் பிரமாதமாக வீசி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவும் சிக்கனமாக வீசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் நிலையிலேயே இல்லை. 212/6 என்று முடிந்தது. பகார் ஜமான் அதிகபட்சமாக 62 ரன்களையும், பாபர் ஆஸம் பிரமாதமாக ஆடி 48 ரன்களையும் எடுத்தனர். குல்தீப் யாதவ், பாபர் ஆஸமை வீழ்த்திய அந்தப்பந்து மிகப்பிரமாதமானது, காற்றில் குறுக்காகச் சென்று பிட்ச் ஆனவுடன் வேகமாக உள்ளே திரும்ப திகைத்துப் போய் பவுல்டு ஆனார் பாபர் ஆஸம். இமாத் வசீம் கடைசியில் 46 ரன்களை எடுத்தார், பாக்.இன் தலைவிதி தொல்வியில் முடிந்தது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT