விளையாட்டு

சேவாக், லஷ்மண் போன்றவர்கள் ஒரு சிறந்த பிரியாவிடைக்குத் தகுதியானவர்களே.. ஆனால் அளிக்கவில்லை: ஹர்பஜன் சிங் வேதனை

ஏஎன்ஐ

டெஸ்ட் கிரிக்கெட்டில் 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அபார ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தன்னை அணியிலிருந்து நீக்கும் முன்பாக யாராவது தன்னிடம் பேசியிருக்கலாம் என்று வருந்தியுள்ளார்.

எல்லா வாரியங்களிலும் இந்த நடைமுறை உண்டு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாது போன்ற நாடுகளில் ஒரு பெரிய வீரரை நீக்கும் முன் அவரிடம் பேசி தெளிவுபடுத்திய பிறகே முடிவெடுப்பார்கள், ஆனால் இந்திய அணியில் எப்போதும் மூடுமந்திரம்தான்.

இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா யூ டியூப் சேனலில் ஹர்பஜன் சிங் கூறும்போது, “இன்னும் கொஞ்சம் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று என் விவகாரம் பற்றி நான் நினைப்பதுண்டு.

100 டெஸ்ட்களை ஒருநாட்டுக்காக ஆடுவது பெரிய விஷயம், அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் படைத்தவன் என்பதை மறுக்கவில்லை. என்னுடைய பார்ம் கொஞ்சம் சரிந்திருக்கலாம், எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இவற்றை இன்னும் கொஞ்சம் நன்றாகக் கையாண்டிருக்கலாம் என்பதே என் ஆதங்கம்.

என்னிடம் யாரும் வந்து பேசவில்லை, மே.இ.தீவுகளிலிருந்து 400 விக்கெட்டுகளுடன் திரும்பினேன், அதன்பிறகு டெஸ்ட்டுக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை.

கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் நான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். தொடரை நாம் இழந்தோம். அதன் பிறகு இந்திய அணிக்கு ஆடவேயில்லை. எனக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. விவரமாக எதிர்காலத்தில் பேசுகிறேன். சேவாக், லஷ்மண், கம்பீர் போன்றோர் ஒரு நல்ல பிரியாவிடைக்குத் தகுதியானவர்களே.

நாமே இவர்களுக்கு மரியாதை செய்யவில்லை எனில் வெளியில் யார் மதிப்பார்கள்? எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன், இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

SCROLL FOR NEXT