தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பிறகு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை, அல்லது டி20 உலகக்கோப்பை ஆகியவற்றில் இந்திய அணியினால் சாம்பியன்கள் ஆக முடியவில்லை என்பதற்கு முக்கியக் கட்டங்களில் அழுத்தங்களைக் கையாள முடியவில்லை என்பதுதான் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
2019 உலகக்கோப்பை அரையிறுதியில் குறைந்த இலக்கை விரட்ட முடியாமல் வெளியேறியதற்கும் முக்கியக் கட்டங்களில் அழுத்தங்களைக் கையாள்வதில் சிக்கல் இருப்பதே காரணம் என்று அவர் தெரிவித்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் கூறியதாவது:
சிறந்த வீரர் என்பதிலிருந்து மிக மிக சிறந்த வீரர் என்ற தகுதியை ஒரு வீரர் எட்ட முடிவது எப்போதெனில் இத்தகைய முக்கியப் போட்டிகளில் எப்படி ஆடுகிறோம் என்பதில்தான் உள்ளது. மற்ற அணிகள் அழுத்தத்தை கையாளும் விதத்தில் நாம் கையாள்வதில்லை என்று தெரிகிறது.
லீக் கட்டத்தில் நன்றாக ஆடிவிட்டு அரையிறுதி, இறுதிகளில் சரியாக ஆட முடியவில்லை என்பது நம் மன வலிமையைப் பொறுத்தது. நம்மிடம் திறமைகள் இருக்கிற்து, அனைத்தும் இருக்கிறது என்று நாம் பேசலாம். நம்மிடம் உலக சாம்பியன்களாகும் தகுதியும் திறமையும் இருக்கலாம் ஆனால் களத்தில் அதை நிரூபிக்கும் வரை உலக சாம்பியன்கள் என்று அழைத்துக் கொள்ளலாகாது.
இவ்வாறு கூறினார் கவுதம் கம்பீர். இவர் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை இரண்டு தொடர்களிலும் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.