சவால் மிக்க ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக ஆடி எதிரணிகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் இளம் மிட்பீல்டரான லில்லிமா மின்ஸ் தெரிவித்துள்ளார்.
7-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி சீனாவின் சாங்ஜவ் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக இந்திய அணி சீனா வந்துள்ளது. அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் சீனா, மலேசியா, சிங்கப்பூர், வட கொரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வட கொரியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
இந்தப் போட்டி தொடர்பாக இந்திய அணியின் இளம் மிட்பீல்டரான லில்லிமா மின்ஸ் கூறியதாவது: இந்தப் போட்டி சவால் மிக்க போட்டி என்பதை நாங்கள் உணர்ந்துள்ள அதேவேளையில், இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி எதிரணிகளை வீழ்த்த முடியும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். சீனா, மலேசியா, சிங்கப்பூர் அணிகளின் சவாலை எதிர்கொள்ள மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம்.
அதேநேரத்தில் வட கொரிய அணியை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் முதல் ஆட்டத்தில் வட கொரியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியோடு தொடங்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளோம். தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தவும், பின்களத்தில் சிறப்பாக செயல்படவும் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை ஒட்டுமொத்த அணியும் உணர்ந்துள்ளது.
குறிப்பிட்ட நிலைக்கு (பொசிஷன்) இவர் பொறுப்பு, அவர் பொறுப்பு என்ற வேலைக்கு இங்கு இடமில்லை. ஒவ்வொருவரும் பந்துக்காக காத்திருக்க வேண்டும். நாங்கள் மிக வேகமாக செயல்படுவதோடு, சிறப்பாக பந்தைக் கடத்தி, பந்தை எங்கள் வசம் வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்றார்.
ஆசிய கோப்பை போட்டி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆகும்.இதில் 9 அணிகள் பங்கேற்றுள்ளன.