விவிஎஸ் லஷ்மணுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் தனக்கு ஒரு கற்றல் அனுபவம் என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் இந்திய இடது கை தொடக்க வீரருமான கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் லஷ்மணுக்கு ஒரு பெரிய பிரியாவிடை கொடுத்திருக்க வேண்டும், அதற்குரிய தகுதி அவரிடம் உள்ளது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
லஷ்மண் நேற்று கம்பீர் குறித்து “பெரிய அளவில் அறிவு ஆர்வமுள்ளவர், ஆட்டத்தின் மீது தீராப் பிடிப்பு உள்ளவர். கிரிக்கெட் களத்தில் சவால்களை கண்டு அவர் அஞ்சியதில்லை. அதாவது நல்ல பவுலிங் சாதக ஆட்டக்களங்களில் அதிவேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போதும் சரி, தவறிழைக்கப்பட்ட சக வீரருக்கு ஆதரவு அளிப்பதாக இருந்தாலும் சரி, பின் வாங்குவது என்பதை அறியாதவர் கவுதம் கம்பீர்” என்று பாராட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கவுதம் கம்பீர் தன் ட்விட்டர் பக்கத்தில், “தேங்க்ஸ் ஸ்பெஷல். உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் ஒரு படிப்பாகும், நம் ஓய்வறை முழுதும் ரோல் மாடல்கல் நிரம்பியிருந்தனர், ஆனால் உங்களை விட பெரிய ரோல் மாடல் யாரும் இல்லை. உங்களுக்கு ஒரு விமரிசையான பிரியாவிடை அளிப்பதற்கான காரணமும் இதுவே. ஆனால் இன்னொன்றையும் ஆர்வமாக கேட்டறிய விரும்புகிறேன் நான் ஷார்ட் லெக் நிலையில் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருந்த போது நீங்கள் ஏன் எப்போதும் சிலி பாயிண்டில் நின்று கொண்டிருந்தீர்கள்” என்று ஒரு நகைச்சுவை உணர்வுடன் ட்வீட்டை முடித்துள்ளார் கம்பீர்.