இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சஷாங்க் மனோகர் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். 2-வது முறையாக பிசிசிஐ தலைவராகவுள்ள சஷாங்க் மனோகர், இதற்கு முன்னர் 2008 முதல் 2011 வரை பிசிசிஐ தலைவராக இருந்துள்ளார்.
புதிய தலைவராக சஷாங்க் மனோகரை தேர்வு செய்வதற்காக பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 4-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் கூறுகையில், “அக்டோபர் 3-ம் தேதி தலைவர் பதவிக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. சஷாங்க் மனோகர், எங்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர். ஒருவேளை சஷாங்க் மனோகரை எதிர்த்து யாராவது போட்டியிட்டு தேர்தல் நடந்தால் அதில் என்.சீனிவாசன் வாக்களிக்கலாம்” என்றார்.
பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொள்ள அனுமதிக்க லாமா என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு அக்டோபர் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால் பிசிசிஐ தலைவர் தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. அது தொடர்பாக அனுராக் தாக்குர் கூறுகையில், “பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்க முடியாது. ஆனால் தேர்தலில் வாக்களிக்க அவருக்கு தடையில்லை” என்றார்.
பிசிசிஐ தலைவராக இருந்த டால்மியா மரணமடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் சூடுபிடித்தன. அதைத்தொடர்ந்து பிசிசிஐயின் இரு துருவங்களாக இருந்த சரத் பவாரும், என்.சீனிவாசனும் ஓர் அணியாக இணைந்து தேர்தலில் குதிப்பதற் கான முயற்சியை என்.சீனிவாசன் எடுத்தார். அதற்காக சரத் பவாரையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து சஷாங்க் மனோ கர், அனுராக் தாக்குர், முன்னாள் பிசிசிஐ பொருளாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோர் மத்திய நிதி அமைச்சரும், பிசிசிஐயில் செல் வாக்குமிக்கவருமான அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசினர். அதன் பலனாக சரத் பவார்-சீனிவாசன் இடையே கூட்டணி ஏற்படுவது முறியடிக்கப்பட்டது.
அதன்பிறகு சஷாங்க் மனோ கரை மீண்டும் பிசிசிஐ தலைவ ராக தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மறுத்த சஷாங்க் மனோகர், பின்னர் தலைவராவதற்கு ஒப்புதல் தெரிவித்தார். வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சஷாங்க் மனோகரின் பெயரை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி முன்மொழிவார் என தெரிகிறது.