இங்கிலாந்தில் தற்போது ஆர்தர்டன், மைக்கேல் வான், இயன் போத்தம், ஹோல்டிங், நாசர் ஹுசைன் உள்ளிட்டோர் வர்ணனை செய்தாலும் பாய்காட்டின் அந்த விநோதமான யார்க்ஷயர் வட்டார ஆங்கில உச்சரிப்பும், இழையோடும் மெல்லிய நகைச்சுவையும், கறாரான விமர்சனமும் மறக்க முடியாதவை.
மெல்லிய நகைச்சுவைக்கு உதாரணமாக ஷாகித் அஃப்ரீடிக்கு வயது 17 என்றால் எனக்கு 35 தான் என்பது போல் ஒருமுறை வர்ணனையில் கேலி செய்ததும் நினைவு கொள்ளத் தக்கது. மேலும் அப்ரீடியை அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார், சேவாகை விமர்சித்து ஒருமுறை நவ்ஜோத் சித்துவிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இயன் சாப்பல் ஒரு வகையான விமர்சகர் என்றால் பாய்காட் இன்னொரு ரகம். இயன் சாப்பல் ஒரு வீரரை புகழ்வதற்கும் விமர்சிப்பதற்கும் ஆழமான காரணங்களை, ஆதாரங்களைக் கொண்டு பேசுவார், பாய்காட் கொஞ்சம் தன் சொந்த உணர்விலிருந்து, உள்ளுணர்விலிருந்து பேசுவார், ஆனாலும் பாய்காட்டிடமிருந்து கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் இயன் சாப்பலிடமிருந்து கிரிக்கெட், கேப்டன்சி, விமர்சன ஆற்றலையும் கற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில் 14 ஆண்டுகாலம் பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் வர்ணனைக்குழுவிலிருந்து வந்த ஜெஃப்ரி பாய்காட், அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு மே.இ.தீவுகள் டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது, கரோனா காலத்தில் இது சர்ச்சையில் உள்ளது. இந்நிலையில் பாய்காட் கூறும்போது, “14 ஆண்டுகால சிறப்பான அனுபவங்களுக்காக பிபிசிக்கு எனது நன்றிகள். நான் அதை முழுமையாக மகிழ்ச்சியுடன் செய்து வந்தேன். கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பவன் நான்.
என் வர்ணனையை மகிழ்ச்சியுடன் அனுபவித்தவர்களுக்கும், என் வர்ணனைப் பிடிக்காதவர்களுக்குமே நன்றி.
நான் தொடரவே விரும்புகிறேன், ஆனால் இப்போதைய தொற்று நோய்ச்சூழலில் நான் எதார்த்த நிலையை புரிந்து கொண்டுதான் முடிவெடுக்க முடியும். ஆம், கரோனாவினால் தான் இந்த முடிவு.
எனக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெற்றது, எனவே இந்த 79 வயதில் வர்ணனை செய்வது தவறானதாகும்” என்றார் பாய்காட்.
-பிடிஐ தகவல்களுடன்