1994ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கிரிக்கெட் சாதனைப் புத்தகம் மாற்றி எழுதப்பட்ட நாள். ஆம்! மே.இ.தீவுகள் பேட்டிங் மேதை பிரையன் லாரா இன்றைய தினத்தில் அன்று 501 நாட் அவுட் என்று முதல் தர கிரிக்கெட் வரலாறு படைத்தார்.
ஆண்ட்டிகுவாவில் இதற்கு 2 மாதங்களுக்கு முன்னர்தான் பிரையன் லாரா இங்கிலாந்துக்கு எதிராக கேரி சோபர்ஸின் 365 ரன்கள் சாதனையைக் கடந்து டெஸ்ட் போட்டியில் 375 ரன்கள் எடுத்து ஓர் உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில்தான் ஜூன் 6, 1994-ல் இங்கிலாந்து கவுண்ட்டி அணியான வார்விக் ஷயருக்கு ஆடிய லாரா டர்ஹாம் அணிக்கு எதிராக பர்மிங்ஹாமில் 501 நாட் அவுட் என்ற இமாலய ரன் குவிப்பில் உலகசாதனை புரிந்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் ஹனீஃப் மொகமட் 499 ரன்கள் எடுத்து சாதனையை வைத்திருந்தார், அதை லாரா உடைத்த தினமாகும் இது. லாரா 427 பந்துகளில் 62 பவுண்டரிகள் 10 சிக்சர்களை இந்த இன்னிங்ஸில் அடித்து நொறுக்கினார் லாரா.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டர்ஹாம் அணி 556/8 என்று டிக்ளேர் செய்தது. இந்த அணியின் ஜான் மோரிஸ் இரட்டைச் சதம் அடித்தார். அதன்பிறகு பிரையன் லாராவின் மட்டையிலிருந்து மைதானம் நெடுக பந்துகள் சிதறின, 10 பீல்டர்கள் போதவில்லை.
அதிர்ஷ்டம்:
இந்த வரலாற்றுச் சாதனையில் லாராவுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது, முதலில் 12 ரன்களில் இருந்த போது நோ-பாலில் பவுல்டு ஆனார். பிறகு 18 ரன்களில் இருந்த போது விக்கெட் கீப்பர் கிறிஸ் ஸ்காட் கேட்சை விட்டார். அதன் பிறகு 500-ல்தான் நின்றது லாரா எக்ஸ்பிரஸ். வார்விக் ஷயர் 810/4 டிக்ளேர் என்று மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது, ஆட்டம் ட்ரா. ஆனாக் வார்விக் ஷயருக்கு 6 புள்ளிகள் கிடைத்தது.
131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிரையன் லாரா 11,953 ரன்களை எடுத்தார். இதில் 34 சதங்கள் 48 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 400, இதுவும் இன்னும் முறியடிக்கப்படாத உலக சாதனையாகும்.
261 முதல்தரப் போட்டிகளில் லாரா 22,156 ரன்களை 65 சதங்கள் 88 அரைசதங்களுடன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.