இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சமூகவலைத்தளங்களில் ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை, தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவார் என தோனியின் மனைவி சாக்ஷி தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் நியூஸிலாந்துடனான அரையிறுதியில் இந்திய அணி தோல்வியுற்றது. அந்த போட்டிதான் தோனி கடைசியாக விளையாடிய கிரிக்கெட் போட்டியாகும். அதன்பின் ஏறக்குறைய ஓர் ஆண்டாகப்போகிறது எந்தவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தோனி பங்கேற்கவில்லை.
உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் தொடர், ஆஸ்திரேலியத் தொடர், இலங்கையுடனான தொடர், வங்கதேசத்தொடர் நியூஸிலாந்து பயணம் என எதிலுமே தோனி விளையாடவி்ல்லை.
இதனால் தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அதற்கு ஏற்றார்போல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை வைத்தே தோனியை அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்தார்.
இதற்கிடையே தோனியை இந்திய அணியி்ன் ஒப்பந்த ஊதியத்திலிருந்து பிசிசிஐ நீக்கியது. ஆனாலும், மனம்தளராத சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி, ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சென்னையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், கரோனா வைரஸ் பீதியால் தனது பயிற்சியை பாதியிலேயே முடித்து சென்னையிலிருந்து ராஞ்சி புறப்பட்டார்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் தோனி ஓய்வுஅறிவிக்கப்போகிறார் எனச் செய்திகள் வெளியாகின, தோனி ஓய்வு டிரண்டாகி பரபரப்பானது
இதைப்பார்த்த தோனியின் மனைவி சாக்ஷி தோனி மிகுந்த மனவேதனையும் வருத்தமும் அடைந்துள்ளார், தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அவர் இன்ஸ்ட்டாகிராம் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தோனிக்கு சமூகவலைத்தளங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் விருப்பமில்லை. அதனால் வீட்டில் ஓய்வாக இருந்து வருகிறார். ஆனால், தோனி ஓய்வு அறிவிக்கப்போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளிவரும் வதந்திகள், வேதனையைத் தருகின்றன.
ஏன், எதற்காக இவ்வாறு பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த செய்திகளைப் பார்த்த பலரும் தொலைப்பேசி வாயிலாகவும், வாட்ஸ்அப் மூலமும் எங்களைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.
நாங்கள் இந்த முறை சிஎஸ்கே அணியுடன் இணைய முடியவில்லை. ஐபிஎல் போட்டி நடக்குமா இல்லையா என்பது முழுமையாக தெரியவில்லை. என் மகள் ஐபிஎல் எப்போது நடக்கும் என தொடர்ந்து கேட்டு வருகிறார்
கிரிக்கெட் இருந்தால் நிச்சயம் கிரிக்கெட் நடக்கும். மகி(தோனி) நிச்சயம் இந்தியஅணி்க்குத் திரும்புவார் அதற்கான பயிற்சியில், முயற்சியில் இருக்கிறார். ஆதலால், தோனி ஓய்வு என்பதெல்லாம் வதந்திதான். கிரிக்கெட் தான் மகிக்கு உயிர், அதைத்தான் அவர் விரும்புகிறார்.
மகி, சமூகவலைத்தளங்களில் வராததற்கு முக்கியக்காரணம் அவரின் ரசிகர்களை அவரால் சமாளிக்க முடியாது. அவர் மீது அனைவரும் மிகுந்த ஆர்வமாக, அன்பைப் பொழிந்து வருவதால் அவர் சமூகஊடகங்களில் இருந்து விலகியுள்ளார்.
தோனி எப்போதுமே ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும் தன்மையுடையவர். வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடினால்கூட அவரின் மனம் ஏதாவது சிந்திக்கும். இப்போது மகி வீட்டில் பப்ஜி விளையாடுவதில்ஆர்வமாக இருந்து வருகிறார். அவரின் அழுத்தங்களை இந்த வீடியோ கேம்ஸ் போக்குகிறது.
அதுமட்டுமல்லால் பைக் பிரியரான மகி, பைக்கிற்கு தேவையான உதரிபாகங்களை வரவழைத்து வீட்டியேலே அதை அசெம்பிள் செய்யும் பணியையும் செய்து வருகிறார்.
தோனி எப்போதுமே மாறவில்லை. அவரின் வீட்டுக்கதவு ரசிகர்களுக்காக 2010-ம் ஆண்டிலிருந்து திறந்துதான் இருக்கிறது. பலரும் வீட்டுக்கு வருகிறார்கள், பேசுகிறார்கள். மகியுடன் கிரிக்கெட் பற்றி யாரேனும் பேசத்தொடங்கினால் நான் போய்விடுவேன்.
கூல்கேப்டன் தோனியுடன் சண்டை போட விரும்பும் நபர் நான் மட்டும்தான். அனைவருக்கும் தோனி பிடிக்கும் போது, எனக்கு மட்டும்தான் சண்டையிட பிடிக்கும்
இவ்வாறு சாக் ஷி தோனி தெரிவித்தார்