2018-19 ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் 2-1 என்று வெற்றி பெற்று இந்தியாவுக்கு மட்டும் சாதனையல்ல துணைக்கண்ட அணிகளுக்கே சாதனையாகும்.
வார்னர், ஸ்மித் இல்லாத அந்த அணியை அவர்கள் சொந்த மண்ணில் விராட் கோலி தலைமை இந்திய அணி டெஸ்ட் தொடரில் வென்றதை ஆஸ்திரேலிய வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆனால் நியூஸிலாந்தில் இந்திய அணி டெஸ்ட்டில் 2-0 என்று தோல்வியடைந்ததையடுத்து ஆஸ்திரேலியா ஐசிசி தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்ததும்தான் அவர்கள் மனம் திருப்தி அடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் கூறியதாவது:
ஒவ்வொரு டெஸ்ட்டில் ஆடும்போதும் என் பவுலிங் பற்றி நான் கற்றுக் கொள்வேன். இந்தியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு 10-15 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பேன் ஒவ்வொரு தொடரின் முடிவிலும் நான் கொஞ்சம் முன்னேறியுள்ளதாக உணர்கிறேன்.
சில பாடங்களையும் கற்றுக் கொண்டேன், முதல் பாடம் டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கொடுமையானது என்பதைத்தான். அவர்கள் முதல் நாள் முழுதும் பேட் செய்வார்கள் 2ம் நாளிலும் நாம் விக்கெட் எடுக்காவிட்டால் பேட் செய்து கொண்டேயிருப்பார்கள். இதை அவர்கள் எங்களுக்கு சில சமயங்கள் செய்து காட்டியுள்ளனர். நாங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் காட்டினர். உலகின் சிறந்த அணியாக இருக்க வேண்டுமெனில் எந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் காட்டினர்.
இவ்வாறு கூறினார் பாட் கமின்ஸ். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா முதலிடம், ஆஸ்திரேலியா 2வது இடம்.