விளையாட்டு

சில வேளைகளில் பேட்டிங் பற்றி அதிகம் யோசித்து சிக்கலாக்கிக் கொள்கிறோம்- புஜாராவை சூசகமாகக் குறிப்பிட்ட விராட் கோலி

பிடிஐ

கரோனா லாக் டவுன் காரணமாக எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாததால் வீரர்கள், நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் செயல்பூர்வமாக இயங்கி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் குறிப்பாக கோலி, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, கயீஃப், அஸ்வின் உள்ளிட்டோர் லைவ் சாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கதேச இடது கை வீரர் தமிம் இக்பாலுடன் சாட் செய்த விராட் கோலி பல்வேறு விஷயங்களை உரையாடினார்.

இதில் வலைப்பயிற்சி உள்ளிட்ட உடற்தகுதி விஷயங்கள், பேட்டிங் நுணுக்கங்கள், பெரும்பாலும் மனநிலை ஆகியவற்றை விவாதித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “பேட்டிங் நிலையில் ஆடாமல் அசையாமல் இருப்பது எனக்கு ஒத்து வரவில்லை, ஆனால் நிறைய பேருக்கு நிலையான ஸ்டான்ஸ் உதவும். சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொண்டால் நிலையான ஸ்டான்ஸ் அவருக்கு வாழ்நாள் முடுழுதும் கைகொடுத்தது. அவருக்கு பிரச்சினைகள் இல்லை, அவரது உத்தி துல்லியமானது, பிரமாதமானது அதனுடன் கண், கை ஒருங்கிணைப்பு அற்புதம்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை என் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வேன். சோதனை முயற்சிகள் வேண்டும் இல்லையெனில் நமக்கு தெரியாமலே போய் விடும். மேட்சில் புதிய ஷாட்களை முயன்றால்தான் அதை துல்லியமாக்க முடியும்.

எனவே நிறைய பயிற்சி மேற்கொண்டாலும் நீங்கள் மேட்சில் அதனை பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அழுத்தத்தில் பயன்படுத்தும் போது அது நமக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.

நிறைய வீரர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள் இதுதான் என் இயல்பான ஆட்டம் இதையே ஆட வேண்டும் என்று கூறுவார்கள், ஆனால் எதிரணியினர் நம்மை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தும் வழிமுறைகளை வகுத்தெடுக்கும் போது நாம் மேம்பாடு அடைந்து அவர்களை விட ஒருபடி மேலே போக வேண்டும்.

பார்மில் இல்லாத போது வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிடலாம், அதில் சரி செய்ய வேண்டியதை சரி செய்த பின் நான் 10 நிமிடம் கூட கூடுதலாக நெட்டில் செலவிட மாட்டேன். டச்சில் இருக்கும் போது வலைப்பயிற்சியில் அதிகம் ஈடுபடக்கூடாது. அது பல தவறுகளுக்கு இட்டுசெல்லும்.

ஆகவே வலைப்பயிற்சி எப்போது வேண்டும் எப்போது வலைப்பயிற்சியை முடிக்க வேண்டும் என்பதையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியிலிருந்து வெளியேறுவதும் திறன் சார்ந்ததுதான்.

ஆனால் இது தனிப்பட்ட வீரர் சம்பந்தப்பட்ட விஷயமாகும். உதாரணமாக புஜாராவை எடுத்துக் கொண்டால் வலையில் 3 மணி நேரம் பேட் செய்வார்.

அனைவருக்கும் கிரிக்கெட் தெரியும் ஆனால் அதனை அதிகம் யோசிப்பதன் மூலம் சிந்திப்பதன் மூலம் பலரும் சிக்கலாக்கிக் கொள்வார்கள்” என்றார் விராட் கோலி.

SCROLL FOR NEXT