எந்த ஒரு அணியும் சில வீரர்களை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறியும், இந்த நன்றியின்மை மனித வாழ்வின், இந்த போட்டி சார் உலகின் நியதியாகி விட்டது.
இந்தியாவில் இப்படி எத்தனையோ வீரர்களை காட்ட முடியும் மொஹீந்தர் அமர்நாத் முதல் தற்போது கருண் நாயர் வரை, அம்பதி ராயுடு முதல் முரளி விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் என்று எத்தனையோ உதாரணங்கள் கூற முடியும் ஆஸ்திரேலியாவிலும் இதன் பட்டியல் மிக நீளம், அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது உஸ்மான் கவாஜா.
இந்நிலையில் உஸ்மான் கவாஜாவுக்காக வருந்தும் தொனியில் பேசிய ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாவது:
நான் நேர்மையாக என்ன நினைக்கிறேன் என்றால் இனி அவர் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைய முடியாது என்றே. நான் அவருக்காக வருந்துகிறேன்.
அவர் நல்ல வீரர் என்றே நான் எப்போதும் கருதி வந்துள்ளேன், ஆனால் அவரது மிகச்சிறந்த ஆட்டத்தை நாங்கள் சர்வதேச அரங்கில் பார்த்ததில்லை. அதன் சில தெறிப்புகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். சீரான முறையில் அவர் நன்றாக ஆடியதில்லை என்றே உணர்கிறோம். ஆஸ்திரேலியாவுக்காக எப்படி நன்றாக ஆட வேண்டுமோ அப்படி அவர் சீராக ஆடவில்லை என்று உணர்கிறோம்.
ஆனால் கிரேட் பிளேயர்களை நாம் அப்படி ஒதுக்கி விட முடியாது. குவீன்ஸ்லாந்து அணிக்கு அவர் ரன்களைக் குவித்தால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வர முடியும்.
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அவர் எங்களை கைவிட மாட்டார் என்றே நிச்சயமாகக் கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.