கரோனா வைரஸ் பிரச்சினை தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 16 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை டி20 தொடரை 2022க்கு தள்ளி வைக்கும் முன்மொழிவு மே 28ம் தேதி ஐசிசி வாரிய கூட்டத்தில் வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் அக். 18 முதல் நவ.15 வரை நடைபெறுவதாக உள்ளது, இதன் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் ஈட்டித்தரும் இந்தியா-ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் நடைபெறவில்லை எனில் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். ஆகவே சுற்றிவளைத்து ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான சாளரத்தைத் திறந்து வைத்து விட்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டை 2 ஆண்டுகளுக்கு தியாகம் செய்ய ஐசிசி முடிவெடுக்கும் என்றே கருதப்படுகிறது, இது தொடர்பான முடிவுகள் மே 28 ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஐசிசி நிகழ்வுகள் கமிட்டி தலைவர் கிறிஸ் டெட்லி தலைமை குழு பல தெரிவுகளை வழங்கியுள்ளது “3 தெரிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதல் தெரிவு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ரசிகர்களுடன் உலகக்கோப்பை டி20யை நடத்துவது. இல்லையெனில் ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது. 3வது தெரிவு உலகக்கோப்பை டி20-யை 2022ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பது” என்று தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் வீரர்களும் ஒருபுறம் இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்காக ஆக்ரோஷமாக பேசி வருகின்றனர். நவம்பர்-டிசம்பரில் இதை நடத்தினால் ஆஸி.க்கு வருவாய் கிடைக்கும். அதனால் உலகக்கோப்பையை 2022க்கு தள்ளி வைப்பதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஆர்வம் காட்டி வருகிறது.
ஐசிசியில் ஆதிக்க உறுப்பினர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இதில் இந்தியா , ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகவே முடிவெடுக்கப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை என்கிறார் ஒரு ஐசிசி நிர்வாகி.
மேலும் உலகக்கோப்பையை தள்ளி வைப்பதில் இந்தியாவும் ஆர்வம் காட்டும் ஏனெனில் அந்தக் காலக்கட்டத்தை ஐபிஎல் தொடரை நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வருவாயைக் கருத்தில் கொண்டு உலகக்கோப்பையை தள்ளி வைக்க ஆஸி. ஆர்வம் காட்டுவதோடு, இந்தியாவும் இதற்கு ஆர்வம் காட்டக் காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ஒரு சாளரம் கிடைத்து விடும் என்பதே.
ஆகவே பணபலமிக்க வாரியங்களா அல்லது ஐசிசியா? எது வெற்றி பெறும் என்பது மே.28ம் தேதி கூட்டத்தில் தெரியவரும்.