புதிய கிரிக்கெட் விதிகள் தாங்கள் ஆடும்போது இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக 4000 ரன்கள் வரை எடுத்திருப்போம் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கரிடம் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர்களாக எண்ணற்ற போட்டிகளில் களமிறங்கியவர்கள் சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும். 176 முறை ஒருநாள் போட்டிகளில் இவர்கள் இணைந்து ஆட்டத்தைத் துவக்கியுள்ளனர். இதில் மொத்தம் 8227 ரன்களை இந்த இணை சேர்த்துள்ளது. சராசரி 47.55. வேறெந்த துவக்க இணையும் 6000 ரன்களுக்கு மேல் ஒருநாள் போட்டிகளில் எடுத்ததில்லை என பிசிசிஐ தரப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
இதை கவனித்த சச்சின் டெண்டுல்கர், "இது அற்புதமான நினைவுகளைக் கொண்டு வருகிறது கங்குலி. இரண்டு புதிய பந்துகள், 30 அடி வட்டத்தைத் தாண்டி 4 ஃபீல்டர்கள் என்ற (புதிய) விதிகளோடு இன்னும் எத்தனை ரன்களை நாம் எடுத்திருப்போம் என்று நினைக்கிறீர்கள்" என்று கேட்டார்.
இதற்கு பதில் சொன்ன கங்குலி, "இன்னும் கிட்டத்தட்ட 4000 ரன்கள் எடுத்திருக்கலாம். இரண்டு புதிய பந்துகள் என்றால், ஆஹா, ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கவர் ட்ரைவில் பந்து பவுண்டரிக்குப் பறப்பதைப் பார்த்திருக்கலாமே. மீதமிருக்கும் 50 ஓவர்களுக்கும் பார்த்திருக்கலாம்" என்று குறிப்பிட்டார். இந்தியாவின் முக்கியமான இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் இப்படி சகஜமாகப் பேசிக் கொண்டது வைரலாகியுள்ளது.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் விதிப்படி ஒரு ஆட்டத்தில் இரண்டு புதிய வெள்ளைப் பந்துகளைப் பயன்படுத்தலாம். அதே போல மூன்று பவர்ப்ளேக்களை பின்பற்ற வேண்டும். முதல் பவர்ப்ளேவில் 30 கஜ வட்டத்தைத் தாண்டி இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் ஐந்து ஃபீல்டர்கள் இருக்கலாம்.
இரண்டு புதிய பந்துகள் விதியை டெண்டுல்கர் நீண்ட காலமாக எதிர்த்து வருகிறார். "இரண்டு புதிய பந்துகள் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்டால் அது (பவுலர்களுக்கு) அழிவுக்காலம். பந்துகள் ரிவர்ஸாக வேண்டுமென்றால் பழையதாக வேண்டும். அதற்கான நேரம் கொடுக்கப்படுவதில்லை. கடைசி ஓவர்களில் ஒரு அங்கமாக இருந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளையே நீண்ட காலமாகப் பார்க்க முடிவதில்லை" என்று சில வருடங்களுக்கு முன்பு டெண்டுல்கர் கூறியிருந்தார்.