மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனதுட்விட்டர் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதும் விளையாட்டுவீரர்களுக்கு பயிற்சிகள் தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்களையும் ஒவ்வொரு பகுதியாக மீண்டும் தொடங்குவோம். தற்போதைய நிலையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் அவசரப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் தற்போது சுகாதாரமும் பாதுகாப்பும் மட்டுமே எங்களது முன்னுரிமை. இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 3-ம் தேதி அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய வீரர்களுக்கான பயிற்சி முகாம் இம்மாத இறுதியில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள விளையாட்டுகளின் பயிற்சியை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் குறித்தும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.