பாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடிப்பதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், பேட்ஸ்மேனுமான இன்ஸமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக 120 டெஸ்ட் போட்டிகள், 378 ஒருநாள் போட்டிகளில் இன்ஸமாம் உல் ஹக் ஆடியுள்ளார். அந்த அணியின் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியலில் இன்ஸமாமுக்கும் நிச்சயமாக இடமுண்டு.
1958 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அணியின் ஹனீஃப், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்த 337 ரன்களே இதுவரை பாகிஸ்தானுக்காக டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்களாக உள்ளது. 2002 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் இன்ஸமாம் 329 ரன்கள் எடுத்தார்.
அந்த ஆட்டத்தில் எதிர்ப்புறம் ஆட வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இன்ஸமாம் மட்டுமே கடைசி வரை தாக்குப் பிடித்தார். இதுபற்றி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள இன்ஸமாம், "கடைசியாகக் களமிறங்கியவரிடம் உன்னால் கொஞ்சம் தாக்குப் பிடிக்க முடியமா என்று நான் கேட்டது என் நினைவிலிருக்கிறது. ஆனால், அதற்கு அவர் கொடுத்த முகபாவனையே அவருக்கு தன்னம்பிக்கை சுத்தமாக இல்லை, நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது. அதனால் நான் தூக்கி அடித்து ஆட ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில் பவுண்டரி கோடுக்கு அருகே நான் அடித்த பந்தை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தனர். அந்த ரன்கள் உலக சாதனையாக இருந்திருந்தால் நிலைமை வேறு. ஆனால் சக பாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை.
ஆட்டம் முடிந்ததும் சாதனையைத் தவறவிட்டதில் வருத்தமா என்று ஒருவர் கேட்டார். அதற்கு நான், '329 ரன்கள் எடுத்ததற்கு சந்தோஷப்பட வேண்டுமா அல்லது அந்த 8 ரன்கள் எடுக்காமல் போனதற்கு வருத்தப்பட வேண்டுமா' என்று கேட்டேன்" என்றார் இன்ஸமாம்.