முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மற்றும் பல அணிகளின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி பாகிஸ்தான் பேட்ஸ்மென் பாபர் ஆஸமை ஒரு தூக்குத் தூக்கியுள்ளார்.
அயல்நாட்டு பயிற்சியாளர் என்பது பிரபலமடைவதற்கு முன்பாக ஒரு வீரர் இன்னொரு வீரரை புகழ்கிறார் என்றால் அதில் உண்மை இருக்கும், அனுபவம் இருக்கும், ஆனால் இப்போதெல்லாம் பயிற்சியாளர்கள் வேலை தேடுகின்றனர், எனவே ஒரு அணியின் ஓரளவுக்கு நன்றாக ஆடும் வீரரை உலக அளவுக்குத் தூக்கினால் பயிற்சியாளர் வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் பல புகழாரங்கள் அள்ளி வீசப்படுகின்றன.
அதனால்தான் தோனிக்கும், கோலிக்கும் கிடைத்த புகழாரங்கள் சேவாகுக்கு, யுவராஜுக்கு, லஷ்மணுக்கு, டிராவிடுக்குக் கிடைக்கவில்லை. அல்லது ஜவகல் ஸ்ரீநாத் போன்றவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இந்நிலையில் டாம் மூடி கிரிக்கெட் பாகிஸ்தான் ஊடகத்துக்குக் கூறியதை நம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்:
“கடந்த ஆண்வு வாக்கில் அவர் சிறப்பான பேட்ஸ்மெனாக அவர் உருவாவார் என்ற எண்ணத்தை தலைதூக்க வைத்தவர் பாபர் ஆஸம்.
விராட் கோலி எப்படி சிறந்த பேட்ஸ்மென் என்பதை நாம் பேசி வருகிறோம், விராட் கோலி பார்ப்பதற்கு நன்றாக ஆடுகிறார் என்றால் பாபர் ஆஸமையும் பாருங்கள்.
மை காட், இவர் ஒரு ஸ்பெஷல். அடுத்த 5-10 ஆண்டுகளில், ஒரு பத்தாண்டின் டாப் 5 வீரர்களில் ஒருவராக இருப்பார்.
அடுத்த 5-10 ஆண்டுகளில் அவர் நிச்சயம் டாப் 5 பேட்ஸ்மென்களில் ஒருவராவார். 26 மேட்ச்கள் அவர் ஆடியுள்ளார், ஆனால் இதில் பாதி மேட்ச்களில் அவர் முக்கிய வீரர்களில் ஒருவராக கருதப்படவில்லை.
இப்போதைய அவரது பேட்டிங் புள்ளி விவரங்களைக் கொண்டு அவரை நியாயப்படுத்த முடியாது. வெளிநாட்டில் அவர் 37 தான் சராசரி வைத்துள்ளார், உள்நாட்டில் 67 வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார் டாம் மூடி.
பாபர் ஆஸம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 5 இடத்தில் நுழைந்தார், இதுவரை 26 டெஸ்ட்கள், 74 ஒருநாள் போட்டிகல், 38 டி20 போட்டிகள் ஆடியுள்ளார். டெஸ்ட்டில் 1850, ஒருநாள் போட்டியில் 3359, டி20யில் 1471 ரன்களை எடுத்துள்ளார் பாபர் ஆஸம்.