விளையாட்டு

டி20 கிரிக்கெட் 4 இன்னிங்ஸ்களாக பிரிக்கப்படுகிறதா? - கம்பீர், பிரெட் லீ விமர்சனம் 

செய்திப்பிரிவு

டி20 கிரிக்கெட்டில் இன்னும் சுவாரசியம் கூட்டுவதற்காக 40 ஒவர்களை 10 ஓவர்களாக 4 இன்னிங்ஸ்கள் கொண்டதாக மாற்ற வேண்டும் என்ற யோசனைகளை கம்பீர் மற்றும் பிரெட் லீ கடுமையாக விமர்சித்தனர்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டை 25 ஓவர்கள் இன்னிங்ஸ்களாக பிரிக்கலாம் என்று கூறியது எதற்காகவெனில் டாஸ் சாதகம் ஒருதலைப்பட்சமாக மாறி விடுகிறது என்பதாலும் பகலிரவு போட்டிகளில் ஒரு அணி பகலில் முழுதும் பேட் செய்ய ஒரு அணி இரவில் முழுது விளக்கொளியில் ஆடும் முறை ஒருதலைப்பட்சமானது என்பதாலும்தான்.

ஆனால் டி20 கிரிக்கெட்டை இன்னும் உடைத்தால் அது என்னவாகும்?

“டி20 கிரிக்கெட்டை இரண்டு இன்னிங்ஸ்களாகப் பிரிப்பது எனக்கு உடன்பாடில்ல்லை, சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளைப் பிரிக்க ஆலோசனை வழங்கினார். அது 50 ஓவர் கிரிக்கெட் அதனால் சச்சின் ஆலோசனையில் ஒரு அர்த்தம் இருந்தது” என்று கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் கூறினார்.

பிரெட் லீ கூறும்போது, “ஐபிஎல் ஆகட்டும் பிக்பாஷ் ஆகட்டும் சர்வதேச டி20 ஆகட்டும் இதே போன்று தொடர்வதில்தான் சுவாரசியம் இருக்கும். இதுதான் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும்.

கிரிக்கெட்டில் சில விஷயங்களை மரபான முறையில்தான் வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 20 ஓவர் கிரிக்கெட்டை 4 இன்னிங்ஸ்களாகப் பிரிக்கும் யோசனை.. சாரி... கொஞ்சம் ஓவர்தான். இலக்கு என்னவென்று தெரிந்து அதை விரட்டுவதிலோ அல்லது தடுப்பதிலோதான் சுவாரஸ்யம் கூடும்” என்றார்.


கம்பீர் கூறும்போது, “ஒருநாள் கிரிக்கெட்டை 25 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களாகப் பிரித்தால், டாஸ் என்பதை கணக்கிலிருந்து எடுத்து விடும். ஏனெனில் சில இடங்களில் டாஸ் வெற்றி தோல்வியை பெரிய அளவில் தீர்மானித்து விடும். எனவே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இதுசரி.

ஆனால் டி20 கிரிக்கெட்டே ஒரு குறுகிய வடிவம், இதற்கு கால அவகாசமே இல்லை. இதைப்போய் 10 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களாகப் பிரித்தால் இன்னும் குறுகிவிடும்” என்றார் கம்பீர்.

SCROLL FOR NEXT