2020 கரீபியன் தலவாஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் ஆட முடியாமல் போனதற்கு ராம்நரேஷ் சர்வான் காரணம், அவர் ஒரு பாம்பு, கரோனாவை விட மோசமானவர் என்றெல்லாம் கிறிஸ் கெய்ல் வசைபாடினார்.
அதற்கு பதில் அளித்துள்ளார் சர்வாண், அதில் அவர் கூறியிருப்பதாவது:
2020 கரீபியன் பிரீமியர் லீகில் ஜமைக்கா அணியில் கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்படாமைக்கு நான் காரணமல்ல. அணித்தேர்வுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தவறாகக் குற்றம் சாட்டுகிறார் கெய்ல், மேலும் சமுதாயத்தில் நன் மதிப்புள்ளவர்கள் மீதும் சேற்றைவாரி இரைத்துள்ளார் கெய்ல்.
அவரது தாக்குதலின் மையமே நான் தான். நான் ஏன் பதில் கூறுகிறேன் என்றால் கெய்லின் உளறல்கள் ஏதோ பதில் அளிக்க வேண்டிய தகுதியுடையது என்பதால் அல்ல. பொதுவாக அவர் குற்றம்சாட்டும்போது நாம் அதை நேர் செய்ய வேண்டியுள்ளது.
அதே போல் அவரால் சேற்றை வாரி இரைக்கப்பட்ட நபர்களையும் நான் காப்பாற்ற வேண்டியுள்ளது.
என் கரியரின் ஆரம்பத்திலிருந்தே நான் கெய்லுடன் ஆடியிருக்கிறேன். அவர் ஒரு அபாரத் திறமை என்பதில் எனக்கு எப்போதும் மதிப்பு உள்ளது. அவர் எனக்கு நெருக்கமான நண்பரும் கூட. எனவேதான் இந்தக் குற்றச்சாட்டுகள் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனக்கும் அவர் நீக்கத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை, என்றார் சர்வாண்.
“ஜமைக்கா அணிக்கு தான் தேர்வு செய்யப்படாததற்கு கெய்ல் பல காரணங்களை அடுக்கியிருக்கிறார். ஆனால் உண்மையென்னவெனில் அணி உரிமையாளர் மற்றும் நிர்வாகமே இந்த முடிவை எடுத்தது. இதில் சர்வாணுக்கு பங்கு எதுவும் இல்லை. இது வர்த்தக மற்றும் கிரிக்கெட் காரணங்களினால் எடுக்கப்பட்ட முடிவு” என்று ஜமைக்க அணி தன் வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.