உஸ்மான் கவாஜா. 
விளையாட்டு

உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ் உட்பட 6 வீரர்கள் நீக்கம்: வீரர்கள் ஒப்பந்தத்தில் கிரிகெட் ஆஸி. அதிரடி 

செய்திப்பிரிவு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா 20 வீரர்களுக்கு மைய ஒப்பந்தம் வழங்கியுள்ளது, இதில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் உட்பட 6 வீரர்கள் இடம்பெறவில்லை. இது பலருக்கும் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷான் மார்ஷ் இல்லாத வேளையில் அவரது சகோதரர் மிட்செல் மார்ஷ் இடம்பெற்றுள்ளார். இவர்களோடு பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், நேதன் கூல்ட்டர் நைல், இந்தியா அங்கு சென்ற போது டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறங்கிய மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரும் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

புதுமுக வீரர்களான லபுஷேன், ஜோ பர்ன்ஸ், ஆஷ்டன் ஆகர், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதோடு மேத்யூ வேடும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத காலக்கட்டங்களிலும் சரி இவர்கள் இருக்கும் போதும் சரி உஸ்மான் கவாஜா கடினமான துபாய் பயணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல இன்னிங்ஸ்களை ஆடி சுவர் போல் நின்றார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எப்போதும் ஒரு நன்றி கெட்ட வாரியம் என்ற பெயர் எடுத்ததுதான்.

அதேபோல் பிரமாதமான ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், இவர் பீபிஎல் கிரிக்கெட்டில் வெளுத்துக் கட்டினார், இவரை 3 வடிவங்களுக்குமான வீரர் என்பதுடன் ஒருநாள், டி20யில் தொடக்க வீரராக இறக்குவேன் என்று டேவிட் ஹஸ்ஸி ஒருமுறை குறிப்பிட்டார், இவருக்கும் இடமில்லை, ஷான் மார்ஷ் நிறைய வாய்ப்புகள் பெற்றாலும் நிச்சயம் டிம் பெய்னை விட இவர் சிறந்த வீரர்தான், டிம் பெய்ன் கேப்டனாக இல்லாவிட்டால் அணியில் அவருக்கு இடம் இல்லை என்றே அங்கு பேச்சு நிலவுகிறது.

ஆஸ்திரேலிய ஒப்பந்த வீரர்கள் பட்டியல் இதோ:

ஆஷ்டன் ஆகர், ஜோ பர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ், பிஞ்ச், ஹேசில்வுட், ஹெட், லபுஷேன், லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், பேட்டின்சன், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்ப்பா.

SCROLL FOR NEXT