இந்திய கிரிக்கெட் அணியின் கற்றல் காலக்கட்டம் முடிந்து விட்டது என்றும் அயல்நாடுகளில் 20 எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வீரர்கள் கண்டுபிடித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்றும் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
புதன் கிழமையன்று இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது, “கிரிக்கெட் மைதானத்துக்கு வருவது டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதற்கல்ல. ஆட்டத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிக முக்கியம். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை வீரர்கள் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெறத் துவங்குவது அவசியம். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கற்றல் காலகட்டம் முடிந்து விட்டது. இப்போது இந்திய வீரர்கள் அயல்நாட்டில் நிறைய போட்டிகளில் விளையாடுகின்றனர், ஆகவே தங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு சூழலில் அனுபவம் என்பது கைகொடுக்கும்.
இதற்காக கூடுதல் பவுலரை அணியில் எடுப்பதும் கைகொடுக்கும். பெரிய அளவில் ரன்கள் குவிப்பது மட்டுமல்ல, 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதே வெற்றிக்கு இன்றியமையாதது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை பாருங்கள். பந்துவீச்சில் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் வெற்றிகள் தானாக வருகின்றன” என்றார்.
1993-ம் ஆண்டு இலங்கையில் இந்திய அணி தொடரை வென்றதோடு சரி. அதன் பிறகு தொடர் வெற்றி அங்கு சாத்தியமாகவில்லை. இந்நிலையில் புதுமுகங்கள் கொண்ட இலங்கை அணியை பற்றி சாஸ்திரி கூறும் போது, “கடந்த காலங்களில் சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் ஒரு அணியாகத் திரண்டு ஆடுவதில் சிறந்து விளங்குபவர்கள்.
நான் முதன்முதலில் இங்கு 80-களில் வந்தபோது இலங்கை அணி 1-0 என்று தொடரை வென்றனர். அவர்களிடம் ஓரளவுக்கு நல்ல பந்துவீச்சு உள்ளது. பிறகு முத்தையா முரளிதரன் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மகேலா, சங்கக்காரா இருந்தனர், ஆனாலும் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் முரளியின் பங்களிப்பே அதிகம்.
மற்ற ஸ்பின்னர்களும் அதனைச்செய்ய முரளிதரன் ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளார். அதனால்தான் இந்தப் பகுதியில் அந்த அணி ஒரு சக்தியாக விளங்குகிறது. எனவே இந்தத் தொடர் ஒரு சவால்” என்றார்.