சிஎஸ்கே அணியில் என்னை ஏலம் எடுக்காதது என் இதயத்தில் பாய்ந்த கத்தி என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக விளையாடிய பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னரும் கூட பல்வேறு காரணங்களால் அணியில் தொடர்ந்து இடம்பெற முடியாத நிலையில் உள்ளார். அணியில் ஏற்கனவே மகேந்திர சிங் தோனி, விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் செயல்படுவதால், இன்னொரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கின் தேவை அணிக்கு இல்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம்.
இந்நிலையில், தமிழக வீரரான தன்னை, ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஏலத்தில் எடுக்காதது குறித்து தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
"2008-ஆம் ஆண்டு நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது ஏலம் நடந்து கொண்டிருந்தது. ஏலம் ஆரம்பிக்கும் வரை, தமிழகத்திலிருந்து வந்து இந்தியாவுக்காக ஆடிக்கொண்டிருப்பது நான் தான், எனவே கண்டிப்பாக என்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுப்பார்கள். ஆனால் என்னை அணித் தலைவராக நியமிப்பார்களா இல்லையா என்பதே என் மனதில் கேள்வியாக இருந்தது. ஆனால் அவர்கள் ஏலத்தில் எடுத்த முதல் பெயர் தோனி, அதுவும் 1.5 மில்லியன் டாலர்களுக்கு.
அப்போது தோனி என்னுடன் தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவரை ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள் என்பதை அவர் என்னிடம் சொல்லவே இல்லை. ஒருவேளை அவருக்கே அது தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் அது தான் என் இதயத்தில் பாய்ந்த மிகப்பெரிய கத்தி. சரி பிறகு என்னை எடுப்பார்கள் என்று நினைத்தேன். இதுவரை 13 ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னமும் சிஎஸ்கேவின் அழைப்புக்காக நான் காத்திருக்கிறேன்" என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் / டெல்லி கேபிடல்ஸ், கிங்க்ஸ் 11 பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடந்த சீஸனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராகவும் செயல்பட்டு அணியை ப்ளே ஆஃப் சுற்று வரை வழிநடத்திச் சென்றார்.