கரோனா வைரஸுக்கு தவிர்க்க முடியாத தீர்வு லாக்-டவுன் என்று அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன, ஆனால் ஏழை எளிய குடும்பங்களில் சிலபல கீழ் நடுத்தரக் குடும்பங்களில் வரவு செலவு போதாமை காரணமாக கணவன் மனைவியிடையே சண்டை வருகிறது, குடிப்பழக்கம் உள்ள கணவன் குடிக்க முடியாததால் மன உளைச்சல்களுக்கு ஆளாகி குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
கரோனாவுக்கும் தீர்வு இல்லை, அதனால் ஆன லாக்-டவுன் பக்க விளைவுகளுக்கும் தீர்வு இல்லை. இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய ஆன்லைன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா கூறும்போது,
“நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். விவேகமற்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள், பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். குடும்ப வன்முறை அதிகரிக்கிறது என்ற செய்தியை நானும் படித்தேன். இது அபத்தம், நான் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், சம மரியாதை நாமும் கோரி வருகிறோம் ஆனால் பெண்கள் தங்களுக்கான மரியாதையை நிலைநாட்ட வேண்டும்
கரோனா நிலைமைகளில் நாம் 1 மாதமாக இருந்து வருகிறோம். நன்கொடை அளிப்பது ஒரு விஷயம். கடந்த ஒருமாதத்தில் எங்களால் ரூ.2. 5 கோடி நிதித் திரட்டினோம் லட்சக்கணக்கில் உணவுகள் வெளியே சென்றுள்ளன. ஆனால் எவ்வளவு செய்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் போதாது.
கரோனாவுக்குப் பிறகே வாழ்க்கை பற்றிய பார்வையே, கருத்தே மாறிவிட்டது. இனி விமானத்தில் ஏறவே இருமுறை யோசிப்போம். இது அனைவருக்கும் தான் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல” என்றார் சானியா மிர்சா.