தோனி தன் ஓய்வை ஏன் இழுத்தடிக்கிறார்? உ.கோப்பை முடிந்தவுடனேயே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றை வைத்துக் கொண்டு அவர் இஷ்டத்துக்கு பலரையும் சீண்டி வருவது வழக்கம்.
இந்த முறை பேட்டி ஒன்றில் தோனி ரசிகர்களைச் சீண்டியுள்ளார்.
அக்தர் கூறியதாவது:
தோனி தன் திறமைக்கேற்ப சிறப்பாக ஆடிவிட்டார். கிரிக்கெட்டை இந்த மரியாதையுடன் அவர் விட்டு விட வேண்டும், மரியாதை இருக்கும் போதே விலகியிருக்க வேண்டும். அவர் ஏன் இழுத்தடிக்கிறார் என்பது தெரியவில்லை. உலகக்கோப்பை 2019 முடிந்தவுடனேயே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
நான் அவர் இடத்தில் இருந்தால் இந்நேரம் ஓய்வு பெற்றிருப்பேன், நான் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் 3-4 ஆண்டுகள் ஆடியிருக்கலாம் ஆனால் நான் 2011 உலகக்கோப்பையுடன் விலகினேன், காரணன் 100% ஆட்டத்தில் நான் இல்லை. எதற்காக இழுத்தடிக்க வேண்டும்?
ஒருநாடாக அவருக்குரிய மரியாதையுடம் தோனிக்கு பிரியாவிடை அளிக்க வேண்டும். அவருக்கு ஒரு அருமையான செண்ட் ஆஃப் அளிக்க வேண்டும். உலகக்கோப்பையை உங்களுக்காக வென்று கொடுத்திருக்கிறார், இந்தியாவுக்காக பல பிரமாதமான விஷயங்களைச் செய்து கொடுத்துள்ளார். அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால் இப்போது ஏதோ அவரைத் தடுக்கிறது.
உலகக்கோப்பை அரைஇறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக அவர் ஆட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை என்ற போதே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன் ஆனால் ஏன் அவர் அறிவிக்கவில்லை என்பதை அவர்தான் கூற வேண்டும்.
உலகக்கோப்பை முடிந்த பிறகு கூட ஒரு பிரியாவிடை போட்டி ஆடி விடைபெற்றிருக்கலாம் அது அவரது ஆளுமைக்கு உகந்ததாக இருந்திருக்கும்.
இவ்வாறு கூறினார் அக்தர்.