கோவிட்-19 எனப்படும் கரோனா வைரஸ் கொள்ளை நோயை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ ஷோயப் அக்தர் முன்மொழிந்துள்ளார்.
இஸ்லாமாபாத்திலிருந்து அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“இந்த நெருக்கடி இக்கட்டான காலத்தில் நான் இந்தியா-பாக் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முன் மொழிகிறேன். கரோனாவை எதிர்கொள்ள போதிய நிதியை இதன் மூலம் திரட்ட முடியும். முதல் முறையாக இந்தப் போட்டிகளின் முடிவு ரசிகர்களை பாதிக்காது என்று நான் கருதுகிறேன்.
விராட் கோலி சதம் அடித்தால் நாங்கள் மகிழ்வோம், அதே போல் பாபர் ஆஸம் சதமெடுத்தால் நீங்கள் மகிழ்வீர்கள், களத்தில் என்ன நடந்தாலும் இரு அணிகளுமே வெற்றி பெற்ற அணியாகத் திகழும்.
இந்தப் போட்டிகள் மூலம் கிடைக்கும் தொகையினை இந்திய அரசும் பாகிஸ்தானும் பிரித்து கொள்ளலாம். அனைவரும் வீட்டில் இருப்பதால் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். நான் இப்போது நடத்த வேண்டும் என்று கூறவில்லை, விசயங்கள் கொஞ்சம் முன்னேற்றமடைந்தவுடன் நடத்தலாம். துபாயில் நடத்தலாம்.
இது நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்தும். இந்தியா எங்களுக்காக 10,000 வெண்டிலேட்டர்களைத் தயாரித்துத் தர முடியும் எனில் பாகிஸ்தான் அதை ஜென்மத்துக்கும் மறக்காது. ஆனால் நாங்கள் கிரிக்கெட் ஆட்டத்தையே முன்மொழிகிறேன். மற்றவை அதிகாரிகளைப் பொறுத்தது.
ஷாகித் அப்ரிடி அறக்கட்டளைக்கு டொனேஷன் கேட்டதற்காக யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங் நெட்டிசன்களால் வசைபாடப்பட்டனர், இது தவறு. இது நாடுகளோ, மதம் சம்பந்தப்பட்டதோ அல்ல, மனிதம் பற்றியது” என்றார் அக்தர்.