விளையாட்டு

முட்டாள்தனத்திற்கு எப்படி மருந்து கண்டுபிடிக்கப் போகிறோம்: ஹர்பஜன் சிங் காட்டம்

செய்திப்பிரிவு

முட்டாள்தனத்திற்கு எப்படி மருந்து கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காட்டமாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதனிடையே பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நேற்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட்டை ஒளிர விட்டார்கள்.

இந்தியா முழுக்கவே பல்வேறு நகரங்களில் இது முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. இதே வேளையில், பலரும் வெடி வெடித்துக் கொண்டாடினார்கள். இதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

வைஷாலி நகர் என்ற ஏரியாவில் மாடியில் வெடி வெடிக்கும்போது, தீப்பற்றிக் கொண்டது. ஆனால் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்து வீடியோ பதிவாக ட்விட்டரில் வெளியானது. இதனைப் பகிர்ந்து பலரும் தங்களுடைய கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், "நாம் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால், முட்டாள்தனத்திற்கு எப்படி மருந்து கண்டுபிடிக்கப் போகிறோம்" என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT