விளையாட்டு

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா ஏ-விடம் இந்தியா ‘ஏ’ படுதோல்வி

செய்திப்பிரிவு

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’அணி 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் 2 போட்டிகளிலும் போனஸ் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா ஏ வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி, முதலில் பேட் செய்தது. இந்தியா மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆனால், ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் கவாஜா, பர்ன்ஸ் இருவரும் வெளுத்து வாங்கினர்.

இருவருமே சதம் விளாசினர். இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 239 ரன்கள் குவித்தது. கவாஜா 104 பந்துகளில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பர்ன்ஸ் 131 பந்துகளில் 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் 14 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் விளாசினார். லின் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பெர்குஸன் 18, வடே 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா ‘ஏ’ 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.

பெரிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கம் கைகொடுக்கவில்லை. அகர்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் உன்முக்த் சந்த் 52 ரன்களும், கேதார் ஜாதவ் 50 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ 42.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா ‘ஏ’ 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் இந்திய வம்சாவளி வீரர் சந்து, ஸம்பா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பர்ன்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

SCROLL FOR NEXT